ரோஸ் மில்க், ஐஸ்கிரீம் சாப்பிட்டால் ருமாட்டிக் காய்ச்சல் வரலாம்
ரோஸ் மில்க், ஐஸ்கிரீம் சாப்பிட்டால் ருமாட்டிக் காய்ச்சல் வரலாம்
UPDATED : ஏப் 17, 2024 12:00 AM
ADDED : ஏப் 17, 2024 10:50 AM
சென்னை:
கோடை காலத்தில், அடிக்கடி ரோஸ் மில்க், ஐஸ்கிரீம் சாப்பிடும் குழந்தைகளுக்கு தொண்டை வலி வந்தால், அலட்சியப்படுத்தக் கூடாது என பொது சுகாதாரத்துறை நிபுணர் குழந்தைசாமி கூறினார்.
இதுகுறித்து, டாக்டர் குழந்தைசாமி கூறியதாவது:
கோடை காலத்தில் குளிர்ச்சியாக சாப்பிடுவது அனைவருக்கும் பிடித்தமானது. குழந்தைகள் பலர், 'ரோஸ் மில்க், ஐஸ்கிரீம்' போன்றவற்றை அதிகம் சாப்பிட விரும்புவர். பெற்றோரும், குழந்தைகளுக்கு அவற்றை அடிக்கடி வாங்கி கொடுப்பது இயல்பாகி விட்டது. ரோஸ் மில்க், ஐஸ்கிரீம், பழரசங்களுடன் சேர்ந்த ஐஸ்கிரீம் ஆகியவை உடலுக்கு அவ்வளவு நல்லதல்ல.
என்றாவது ஒரு நாள் ஆசைக்காக சிறிதளவு சாப்பிடலாம். தொடர்ந்து சாப்பிட்டால், தொண்டை வலி, சளி போன்ற உடல் உபாதைகள் ஏற்படும். இவை சாதாரணமானவை என, அலட்சியப்படுத்தக் கூடாது. தொண்டை வலி ஏற்பட்டு அலட்சியப்படுத்தினால், ருமாட்டிக் காய்ச்சல் ஏற்படும். இது, இதயம், மூட்டுகள், தோல் மற்றும் மூளையை பாதிக்கக்கூடிய நோயாகும்.
உடனடியாக சிகிச்சை பெறாத குழந்தைகளுக்கு, இதய பாதிப்புடன், சிறுநீரக பாதிப்பும் ஏற்படும். எனவே, கோடைகாலம் தான் என குழந்தைகளை, ரோஸ் மில்க், ஐஸ்கிரீம் போன்றவற்றை அதிகம் சாப்பிட பெற்றோர் அனுமதிக்காதீர்.
அவ்வாறு சாப்பிடும் குழந்தைகளுக்கு, லேசான தொண்டை வலி வந்தாலும் அலட்சியப்படுத்தாமல், டாக்டரின் பரிந்துரைப்படி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.