UPDATED : அக் 21, 2024 12:00 AM
ADDED : அக் 21, 2024 08:14 AM
மஞ்சூர்:
மஞ்சூர் போலீசார் சார்பில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போதைப் பொருள் ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டது.
மாவட்ட எஸ்.பி. நிஷா உத்தரவின் பேரில், போதை பொருட்கள் புழக்கத்தை அடியோடு ஒழிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மாவட்டம் முழுவதும் போலீசார் போதை பொருட்கள் பயன்பாடு மற்றும் விற்பனையை தடுக்க தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும், போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, மஞ்சூர் போலீசார் சார்பில் போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து, மஞ்சூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இடையே ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.
எஸ்.ஐ., சுரேஷ் தலைமை வகித்து, போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் சாலை பாதுகாப்பு, போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும் விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து நடந்த போட்டியில் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்று தலைப்புக்கேற்ற ஓவியங்களை வரைந்தனர். சிறந்த ஓவியங்கள் வரைந்த மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.