ஹிந்தி மொழியை எளிதாக கற்க பள்ளிகளில் இ-கியூப் ஆய்வகங்கள்
ஹிந்தி மொழியை எளிதாக கற்க பள்ளிகளில் இ-கியூப் ஆய்வகங்கள்
UPDATED : அக் 23, 2024 12:00 AM
ADDED : அக் 23, 2024 09:56 PM
பாலக்காடு:
கேரளாவில், அரசு நடுநிலை பள்ளி மாணவர்கள், ஹிந்தியை எளிதாகக் கற்க இ-கியூப் (E-Cube) ஹிந்தி மொழி ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கேரள மாநில, கல்விக்கான உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப தலைமை நிர்வாக அதிகாரி அன்வர் சாதத் கூறியதாவது:
இலவச மென்பொருள் உதவியுடன், கணினி வாயிலாக உயர் தொழில்நுட்பக் கற்றல் என்பதே 'இகியூப்' நோக்கமாகும். இந்த மொழி ஆய்வகங்கள், ஹிந்தியைக் கேட்பது, புரிந்துகொள்வது, பேசுவது, படிப்பது மற்றும் எழுதுவது போன்ற பயிற்சிகளை வழங்குகிறது.
இத்திட்டத்தில், ஐந்தாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, பள்ளிகளில் தற்போதுள்ள கணினிகளில் ஆப்லைன் ஆகவும் ஹிந்தி மொழி ஆய்வகத்தை பயன்படுத்த முடியும்.
கற்றல் உள்ளடக்கம் ஒவ்வொரு வகுப்பிற்கும் மூன்று நிலைகளில் அமைக்கப்பட்டுள்ளது. கேட்டல், பார்த்தல், படித்தல் என அலகுகள் உள்ளன. அனிமேஷன் வடிவங்களுடன் மாணவர்களுக்கு தொடர்பு கொள்ளல் மற்றும் கணினியில் மாணவர்கள் செய்து முடித்த செயல்களை ஆடியோ மற்றும் வீடியோவாக பதிவும் செய்யலாம்.
ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவரின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்ய முடியும். இதற்காக ஆசிரியர்களுக்கு விரைவில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, இந்த கல்வியாண்டிலேயே அனைத்து பள்ளிகளிலும் இகியூப் திட்டம் துவங்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.