UPDATED : அக் 17, 2025 06:29 PM
ADDED : அக் 17, 2025 06:29 PM

சென்னை:
புவி அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க மாநாடு 2025-ன் முன்னோட்ட நிகழ்வு சென்னை தேசிய கடல்வளத் துறை தொழில்நுட்பக்கழகத்தில் இன்று நடைபெற்றது.
'நீலப் பொருளாதாரம்' என்ற மையப் பொருளில் புதுடில்லியில் நவம்பர் 3 முதல் 5 வரை நடைபெறவுள்ள இம்மாநாடு, கடல்சார் வளங்களை நீடித்த முறையில் பயன்படுத்தி பொருளாதார வளர்ச்சி, வாழ்வாதார மேம்பாடு மற்றும் கடல்சார் உயிரினங்களின் பாதுகாப்பை முன்னேற்றும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 13 மத்திய அமைச்சகங்கள் மற்றும் பல துறைகள் பங்கேற்கின்றன.
முன்னோட்ட நிகழ்வில் தேசிய கடல்வளத் துறை தொழில்நுட்பக் கழக இயக்குநர் பேராசிரியர் பாலாஜி ராமகிருஷ்ணன், புவி அறிவியல் அமைச்சகத்தின் முக்கிய ஆலோசகர் டாக்டர் என். ரவிச்சந்திரனின் செய்தியை வாசித்தார். அதில், நீடித்த வளர்ச்சிக்கான நீலப் பொருளாதாரத்தின் முக்கியத்துவம், கடல்சார் ஆய்வுகள், ஆழ்கடல் துரப்பணங்கள், கடல்சார் உயிரி தொழில்நுட்பம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பங்களிப்பு குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது.
பேராசிரியர் பாலாஜி ராமகிருஷ்ணன் உரையாற்றுகையில், “ஆழ்கடல் இயக்கம் போன்ற முன்முயற்சிகளின் மூலம் இந்தியா கடல்சார் ஆராய்ச்சியில் உலகளாவிய தலைவராக உருவாகி வருகிறது,” என்றார். இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மைய இயக்குநர் டாக்டர் பாலகிருஷ்ணன் நாயர், கடல்சார் தொழில்நுட்பம் மற்றும் தரவு சார்ந்த சேவைகளில் துறைகள் இடையேயான ஒத்துழைப்பின் அவசியத்தை வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் தேசிய கடற்கரை ஆய்வு மைய இயக்குநர் டாக்டர் ஆர்.எஸ். கன்காரா, ஆழ்கடல் இயக்க இயக்குநர் டாக்டர் எம்.வி. ரமணமூர்த்தி, மத்திய புவி அறிவியல் அமைச்சக விஞ்ஞானி பி.கே. ஸ்ரீவஸ்தவா உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.