UPDATED : ஏப் 10, 2024 12:00 AM
ADDED : ஏப் 10, 2024 10:29 AM

பல்லடம்:
பல்லடம் அரசு கல்லுாரி ஆண்டு விழா, விளையாட்டு விழா மற்றும் பட்ட மளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது.கல்துாரி முதல்வர் மணிமேகலை தலைமை வகித்தார். துணை முதல்வர் ஜெயச்சந்திரன் வரவேற்றார்.
கல்லுாரி கல்வி இணை இயக்குனர் கலைச்செல்வி பேசியதாவது:
படிப்பு மட்டுமே உலகில் அங்கீகாரம் தரும். முந்தைய காலத்தில், படிப்பின் மூலம் எங்கள் உள்ளம் விசாலமானது. இன்று உள்ளது போல் சிந்தனைகளை சிதறடிக்கும் தொழில்நுட்பங்கள் அன்று இல்லை.
பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தான் நாங்கள் படித்தோம். நம்மையெல்லாம் கஷ்டப்பட்டு படிக்க வைக்கும் பெற்றோருக்கு நாம் திருப்பி செலுத்தும் கடன் என்பது, நாம் நன்றாக படித்து பட்டம் வாங்குவது ஒன்றே ஆகும். வாழ்க்கையில் உயரமான இடத்துக்குச் செல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் படிக்க வேண்டும்.
உறக்கத்தில் வருவதல்ல கனவு; உறங்கவிடாமல் செய்வதை கனவு என்கிறார் அப்துல் கலாம். நாம் எதை அடைய வேண்டுமோ, முதலில் அதற்காக ஆசைப்பட வேண்டும். ஆசைப்பட்டால் மட்டுமே பிரபஞ்சம் நாம் கேட்பதை கொடுக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, மாணவ - மாணவியருக்கு பட்டமளிப்பு நடந்தது. தொடர்ந்து நடைபெற்ற விளையாட்டு, பேரவை நிறைவு விழாவுக்கு, திருப்பூர் எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரி முதல்வர் எழிலி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கல்லுாரி பேராசிரியர்கள் சவுந்தரராஜன், கிருஷ்ணவேணி ஆகியோர் விழாவை ஒருங்கிணைத்தனர்.