கேளம்பாக்கம் அரசு பள்ளிகளுக்கு ரூ.12 லட்சம் மதிப்பில் கல்விச்சீர்
கேளம்பாக்கம் அரசு பள்ளிகளுக்கு ரூ.12 லட்சம் மதிப்பில் கல்விச்சீர்
UPDATED : ஜூலை 17, 2024 12:00 AM
ADDED : ஜூலை 17, 2024 10:08 AM
திருப்போரூர்:
கேளம்பாக்கத்தில் மூன்று அரசு பள்ளிகளுக்கு, 11.80 லட்சம் ரூபாய் மதிப்பில், பேரணியாக சென்று நேற்று கல்விச்சீர் வழங்கப்பட்டது.
திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கத்தில், அரசு தொடக்கப்பள்ளி, மகளிர் உயர்நிலைப்பள்ளி, ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன.
இந்த மூன்று பள்ளிகளில், 2,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர். மேற்கண்ட பள்ளிகளுக்கு, கேளம்பாக்கம் ஊராட்சி நிர்வாகம், திருவள்ளுவர் கல்வி மன்றம், பெற்றோர்கள் சார்பில், 11.80 லட்சம் ரூபாய் மதிப்பில், கல்விச்சீர் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது.
இதில், மூன்று பள்ளிகளுக்கு தேவையான இருக்கைகள், பெஞ்ச், பீரோ, மின் விளக்கு, ஒலிபெருக்கி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. இதற்காக, அனைத்து சீர்வரிசை பொருட்களுடன் கேளம்பாக்கம் சமுதாய நல கூடத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டனர்.
இந்த பேரணியை, ஊராட்சி தலைவர் ராணி கொடியசைத்து துவக்கி வைத்தார். கேளம்பாக்கம் - வண்டலுார் சாலை, ஓ.எம்.ஆர்., சாலை, கோவளம் சாலை வழியாக, பள்ளிகளுக்கு வந்தடைந்தனர்.
அந்தந்த பள்ளிகளில், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரையும் வரவேற்றனர். கொண்டுவரப்பட்ட சீர்வரிசை பொருட்கள், தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
திருவள்ளுவர் கல்வி மன்ற நிறுவனர் மற்றும் பயிற்றுனர் பழனி, கேளம்பாக்கம் ஊராட்சி, சாத்தான்குப்பம் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் எல்லப்பன், துணைத் தலைவர் பாஸ்கர், வார்டு கவுன்சிலர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.