1 முதல் 9ம் வகுப்பு வரை தேர்ச்சிக்கு கல்வித்துறை ஒப்புதல்
1 முதல் 9ம் வகுப்பு வரை தேர்ச்சிக்கு கல்வித்துறை ஒப்புதல்
UPDATED : மே 13, 2024 12:00 AM
ADDED : மே 13, 2024 09:40 AM

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 1 முதல் 9ம் வகுப்பு வரையில், மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியரை தேர்வில் தோல்வியுற செய்யக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.நாமக்கல் மாவட்டத்தில், 850க்கும் மேற்பட்ட பள்ளிகளில், 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில், 301 அரசு, தனியார் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும், 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளின் தேர்ச்சிக்கு ஒப்புதல் வழங்கும் நிகழ்ச்சி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நேற்று முன்தினம் மாவட்ட கல்வி அலுவலர் விஜயன் (உயர்நிலை) தலைமையிலும், நேற்று, மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) (தனியார் பள்ளிகள்) மரகதம் தலைமையிலும் நடந்தன. இதில், தேர்வில் பங்கேற்ற அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற செய்வதற்கான ஒப்புதல் கடிதம் தலைமையாசிரியர்களிடம் வழங்கப்பட்டது.