எஸ்.எஸ்.எல்.சி.,யில் தேர்ச்சியை அதிகரிக்க இரவு வகுப்புகளை நடத்துகிறது கல்வித்துறை
எஸ்.எஸ்.எல்.சி.,யில் தேர்ச்சியை அதிகரிக்க இரவு வகுப்புகளை நடத்துகிறது கல்வித்துறை
UPDATED : ஜன 22, 2026 12:27 PM
ADDED : ஜன 22, 2026 12:31 PM

தாவணகெரே: எஸ்.எஸ்.எல்.சி., வகுப்பில், மாணவ, மாணவியரின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க கல்வித்துறை உறுதி பூண்டுள்ளது. சென்னகிரி தாலுகாவில் மாணவர்களுக்கு இரவு வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன.
10ம் வகுப்பான எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு நெருங்குகிறது. தேர்வுக்கு மாணவ, மாணவியர் தயாராகி வருன்றனர்.
இம்முறை தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதனால், தாவணகெரே மாவட்டம் சென்னகிரி தாலுகாவில், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியருக்கு இரவு வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன.
கெரபிளசி ரூரல் அரசு உயர் நிலைப்பள்ளி, கெரபிளசி கிராமத்தின் அரசு உருது பள்ளி உட்பட பல்வேறு பள்ளிகளில் இரவு வகுப்புகள் நடக்கின்றன.
தினமும் காலை, 9:00 மணிக்கு பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியர், இரவு, 8:00 மணி வரை வகுப்புகளில் பங்கேற்கின்றனர். ஆசிரியர்களுடன், பெற்றோரும் ஒத்துழைப்பு அளிக்கின்றனர்.
சென்னகிரி கல்வித்துறை அதிகாரி ஜெயப்பா கூறியதாவது:
சென்னகிரியின் பல்வேறு பள்ளிகளில், இரவு வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன. மேலும், 45 பள்ளிகளில் அடுத்த சில நாட்களில் இரவு வகுப்புகள் துவக்கப்படும்.
ஊரக பகுதிகளில் குளிர் அதிகமாக இருப்பதால், தாவணகெரே மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளிலும் இரவு வகுப்புகளை, உடனடியாக துவங்க முடியவில்லை.
விரைவில் மற்ற பள்ளிகளிலும், இரவு வகுப்புகள் துவக்கப்படும். எஸ்.எஸ்.எல்.சி.,யில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பது, எங்களின் குறிக்கோள்.
இந்த பொறுப்பை ஆசிரியர்களிடம் ஒப்படைத்துள்ளோம். பெரும்பாலான பள்ளிகளில் மாணவியரை விட, மாணவர்கள் கல்வியில் ஓரளவு பின் தங்கியுள்ளனர். எனவே, மாணவர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் தருகிறோம்.
எஸ்.எஸ்.எல்.சி., மாணவ, மாணவியரின் வாழ்க்கையில் முக்கியமான கட்டம். இதில், அவர்கள் தேர்ச்சி பெறுவது, எதிர்காலத்துக்கு நல்லது. இதை மனதில் கொண்டு, இரவு வகுப்பு எடுக்கிறோம்.
மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் வகுப்பில் ஆஜராகின்றனர். சில பள்ளிகளில் இரவு 10:30 மணி வரை வகுப்புகள் நடக்கின்றன. மாணவியர் இரவு, 8:30 மணி வரையும், மாணவர்கள், 10:30 மணி வரையும் பாடம் படிக்கின்றனர்.
இவ்வாறு கூறினார்.

