தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க அட்மிஷனில் வரையறை தேவை; கல்வித்துறை அதிகாரிகள் எதிர்பார்ப்பு
தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க அட்மிஷனில் வரையறை தேவை; கல்வித்துறை அதிகாரிகள் எதிர்பார்ப்பு
UPDATED : அக் 08, 2025 08:13 AM
ADDED : அக் 08, 2025 08:15 AM

பொள்ளாச்சி:
அரசு பள்ளிகளில் ஆண்டு முழுதும் மாணவர் சேர்க்கை நடப்பதை வரையறை செய்ய வேண்டும் என, கல்வித்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு பள்ளிகளில், ஒவ்வொரு கல்வியாண்டு துவக்கத்திலும் மாணவர் சேர்க்கை துவங்கி, ஆக., 1ம் தேதி வரை நடக்கிறது. அதிலும், கால அவகாசம் நீட்டிக்கப்பட்டால், ஆக., 31ம் தேதி வரை சேர்க்கை தொடர்கிறது. ஆனால், தற்போது, ஆண்டு முழுதும் கூட அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. 'ஆன்லைன்' வாயிலாகவும் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
இதனை சாதகமாக்கிக் கொள்ளும் சில மாணவர்கள், பல்வேறு காரணங்களைச் சுட்டிக் காட்டி, பல பள்ளிகளுக்கு மாறுதல் ஆகின்றனர். பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், இத்தகைய நிலை நீடிப்பதால், ஒரே நிலைபாட்டுடன் கல்வி பயில முயற்சிக்காமல், மாணவர்கள் சிலர், கற்றலில் பின்தங்கி வருவதாகவும் புகார் எழுகிறது.
கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
அனைவருக்கும் கட்டாய கல்வி திட்டத்தின் கீழ், ஒன்று முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள், மாற்றுச்சான்றிதழ் இன்றி, எந்தவொரு பள்ளியிலும் சேர முடியும். அதற்கு, பிறப்புச் சான்று, ஆதார், தந்தையின் மொபைல்போன் எண் மட்டும் இருந்தால் போதும்.
இதனை சாதகமாக்கிக் கொள்ளும் சிலர், ஆசிரியர்கள் கடிந்து கொண்டாலோ, குடும்பத்தில் பிரச்னை எழுந்தாலோ திடீரென பள்ளி மாறுகின்றனர். ஆண்டு முழுதும் மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதால், பள்ளித் தலைமையாசிரியர்களும் அவர்களை பள்ளியில் சேர்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
ஒரே பள்ளியில், நிலைபாட்டுடன் படிப்பில் கவனம் செலுத்தினால் மட்டுமே மாணவர்கள் கற்றலில் முன்னேறுவர். பள்ளி மாறும் மாணவர்கள், பெயரளவில் கல்வி கற்கவே முற்படுகின்றனர். தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த மாணவர் சேர்க்கையிலும் வரையறை செய்வது அவசியமாகும். இதற்கு, மாணவர் சேர்க்கையை, ஆக., மாதம் வரை மட்டுமே நடத்த வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.