தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நடத்தை, குணத்தை நிர்ணயிப்பது கல்வி: துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பேச்சு

நடத்தை, குணத்தை நிர்ணயிப்பது கல்வி: துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பேச்சு

நடத்தை, குணத்தை நிர்ணயிப்பது கல்வி: துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பேச்சு


UPDATED : ஜன 13, 2026 10:57 AM

ADDED : ஜன 13, 2026 11:00 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 13, 2026 10:57 AM ADDED : ஜன 13, 2026 11:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:
“விவாதம், கலந்துரையாடல், கருத்து வேறுபாடு மற்றும் மோதல்கள் கூட ஆரோக்கியமான ஜனநாயகத்தின் அடையாளங்கள் தான். இவையெல்லாம் இருந்தால் தான், இறுதி முடிவு கிடைக்கும்,” என துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார்.

டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையின், 9வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.

மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கி துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

பட்டம் பெற்ற மாணவர்கள் தங்கள் அறிவையும் திறமையையும் நாட்டுக்கு அர்ப்பணிக்க வேண்டும். கல்வி என்பது பட்டங்களுக்கு அப்பாற்பட்டு, நல்ல குணத்தை வளர்க்கவும், அறிவை வலுப்படுத்தவும், தனிநபர்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்க அதிகாரம் அளிக்கவும் வேண்டும்.

வரும், 2047ம் ஆண்டில் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்க, கல்வியும் முறையான பயிற்சியும் மட்டுமே நம் நாட்டின் இளைஞர்களுக்கு உதவும்.

நாலந்தா மற்றும் தட்சசீலம் போன்ற பண்டைய கால கல்விச்சாலைகளில் உபநிடதங்கள், பகவத் கீதை, கவுடில்யரின் அர்த்த சாஸ்திரம், திருவள்ளுவரின் திருக்குறள் மற்றும் நம் நாட்டின் வேதங்கள், செவ்வியல் நூல்கள், சமூக மற்றும் வாழ்க்கை நெறிமுறைகள் கற்பிக்கப்பட்டன .

உண்மையான கல்வி, ஒருவரின் நடத்தை மற்றும் குணத்தை வடிவமைக்கிறது. அது பட்டங்களைப் பெறுவதோடு நின்று விடுவதில்லை. கலந்துரையாடல், கருத்து வேறுபாடு, விவாதம் மற்றும் மோதல்கள் கூட ஆரோக்கியமான ஜனநாயகத்தின் அத்தியாவசியக் கூறுகள். இவையெல்லாம் இருந்தால் தான் இறுதி முடிவு கிடைக்கும்.

ஒரு முடிவு எடுக்கப்பட்ட பின், சுமுகமான மற்றும் திறமையான நிர்வாகத்தை உறுதி செய்யவும் அதைச் செயல்படுத்தவும் கூட்டு மனப்பான்மை வேண்டும். உண்மையைத் தேடுவதில் அறிவுசார் நேர்மை, ஏற்றத் தாழ்வுகளைக் குறைக்க சமூக உள்ளடக்கத்தை உறுதி செய்தல், நாட்டு வளர்ச்சிக்கு பங்களித்தல் ஆகியவற்றை பட்டதாரிகள் கடைப்பிடிக்க வேண்டும்.

அரசியலமைப்பு சட்டங்கள் நம் நாட்டின் நாகரிக நெறிமுறைகளால் வழிநடத்தப்பட வேண்டும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை மதிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஜவஹர்லால் நேரு பல்கலை வேந்தர் கன்வல் சிபல், துணைவேந்தர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட், பேராசிரியர்கள், அதிகாரிகள், மாணவ மாணவியர் பங்கேற்றனர்.

27 சதவீத பெண்கள்



ஜவஹர்லால் நேரு பல்கலை துணைவேந்தர் சாந்திஸ்ரீ துலிபுடி பண்டிட் பேசியதாவது:
கடந்த, 1969ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்தப் பல்கலை, 14 கல்லூரிகள், 9 சிறப்பு மையங்களை உருவாக்கியுள்ளது. தற்போது, 80 முனைவர் பட்டப் படிப்புகள், 49 முதுகலை பட்டப் படிப்புகள், 13 இளங்கலை பட்டப் படிப்புகள், 7 சான்றிதழ் படிப்புகள், 3 பட்டயப் படிப்புகள், ஒரு முதுகலை பட்டயப் படிப்பு உள்ளன.
பல்கலையில் இப்போது, 9,100 பேர் படிக்கின்றனர். இந்த ஆண்டு எண்ணிக்கை மேலும் 3,000 அதிகரிக்க வாய்ப்புள்ளது. நாட்டின் சிறந்த பல்கலைகளில் ஒன்றாக ஜே.என்.யூ., திகழ்கிறது. தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் நம் பல்கலைக்கு ஏ++ மதிப்பெண் வழங்கியுள்ளது.

தேசிய தரவரிசையில் பத்தாவது இடத்தில் இருந்து ஒன்பதாவது இடத்துக்கு முன்னேறியுள்ளோம். ஜே.என்.யூ., பல்கலைக்கு மத்திய அரசு முழுமையாக நிதி வழங்குகிறது. அனைத்து படிப்புகளிலுமே நம் நாட்டின் நாகரிக அறிவு மற்றும் கற்பித்தல் ஞானத்தை பயன்படுத்துகிறோம். அதேபோல, இந்திய மொழிகளில் சிறப்பு கவனம் செலுத்துகிறோம். ஜைன வணிகர்கள் ஒன்றிணைந்து ஜைன இருக்கைக்காக, 10 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளனர்.

சமீபத்தில், 'பயோநெஸ்ட்' என்ற புதிய உயிரி தொழில்நுட்ப அடை காப்பகம் அமைத்துள்ளோம். உயிரி அறிவியலில் புத்தாக்கம் மற்றும் 'ஸ்டார்ட் - அப்'களை வளர்க்க உயிரி தொழில்நுட்பத் தொழில் ஆராய்ச்சி உதவி மன்றத்திடம் மானியம் பெறப்பட்டது. துணை வேந்தராக நான் பொறுப்பேற்றபோது, பல்கலையில் 19 சதவீத பெண்கள் இருந்தனர். இன்று, உயர் தலைமைப் பதவிகளில் 27 சதவீதம் பெண்கள் இருக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us