UPDATED : மே 22, 2025 12:00 AM
ADDED : மே 22, 2025 07:59 AM
ஆரோவில் :
ஆரோவில்லில் நிலையான தொழில்கள் மற்றும் ஒருங்கிணைந்த கல்வி முறையை, கல்வி அமைச்சக அதிகாரி ஆஞ்சல் கடியார் ஆய்வு செய்தார்.
மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பத்திரிகை தகவல் பணியகம் (பி.ஐ.பி.,) ஊடக மற்றும் தகவல் தொடர்பு அதிகாரி ஆஞ்சல் கடியார் விழுப்புரம் மாவட்டம், ஆரோவில்லிற்கு மூன்று நாள் பயணமாக வந்துள்ளார். இவர், ஆரோவில்லின் தனித்துவமான சமுதாய பொருளாதார அமைப்பு, நிலையான தொழில் நிறுவனங்கள், ஒருங்கிணைந்த கல்வி முறையை ஆவணப்படுத்த உள்ளார்.
தேசிய திறன் மேம்பாடு, சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில் முனைவோர் திட்டங்கள் பயன்படுத்தும் முறைகளை ஆய்வு செய்த ஆஞ்சல் கடியார், ஆரோவில் அறக்கட்டளை அலுவலகம், நகர மேம்பாட்டு கவுன்சில், ஸ்ரீ அரவிந்தர் சர்வதேச கல்வி ஆராய்ச்சி நிறுவன பிரதிநிதிகளை சந்தித்து பேசினார். ஆரோவில் அறக்கட்டளை திட்ட ஒருங்கிணைப்பாளர் மோலிகா கலந்துரையாடினார்.
நிலையான தொழில் நிறுவனங்களான ஸ்வரம் கைவினை பொருட்கள் தயாரிப்புகள், மண்பாண்டங்கள் தயாரிப்பு பொருட்கள், தோல் பொருட்கள், பழஜாம்கள் உள்ளிட்ட இயற்கை உணவு பொருட்கள், தாவர சாயங்களை ஆய்வு செய்தார்.
ஆய்வுக்கு பின் ஆஞ்சல் கடியார் கூறியதாவது:
ஆரோவில்லில் உள்ள சிறு தொழில் நிறுவனங்களின் திறமை, அர்ப்பணிப்பு மிகவும் ஊக்கமளிக்கிறது. இவர்களின் பணி இந்தியாவின் நிலையான வாழ்வாதாரம் மற்றும் பசுமை தொழில் முனைவு குறித்த பார்வைக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது. இதுபோன்ற அடிமட்ட அளவில் நடக்கும் புதுமையான முயற்சிகளை தேசிய அளவில் கொண்டு செல்ல வேண்டும். கல்வி அமைச்சகம், பத்திரிக்கை தகவல் பணியகம் மூலம் ஆரோவில்லின் இந்த சிறப்பான பணிகளை டிஜிட்டல் தளங்கள் மூலம் வெளிச்சம் போட்டு காட்டுவேன்.
இந்த சிறப்பான மாதிரிகள் ஆரோவில்லோடு நின்று விடக்கூடாது. பி.ஐ.பி., வெளியீடுகள், அமைச்சகத்தின் பிரசாரங்கள், கல்வி சார்ந்த தளங்கள் மூலம் இவர்களின் கதைகளை வெளி கொணர்வதை உறுதி செய்வேன் என தெரிவித்தார்.
இறுதியாக, மாத்ரி மந்திர் மற்றும் வளர்ச்சி பணிகளை பார்வையிட்டார்.