அட்மிஷனில் முந்தும் தனியார் பள்ளிகள் கவனிக்காத கல்வித்துறை அதிகாரிகள்
அட்மிஷனில் முந்தும் தனியார் பள்ளிகள் கவனிக்காத கல்வித்துறை அதிகாரிகள்
UPDATED : மார் 26, 2025 12:00 AM
ADDED : மார் 26, 2025 10:21 AM

செய்யூர்:
செய்யூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கடப்பாக்கம், செய்யூர், சித்தாமூர், மதுராந்தகம், அச்சிறுபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், ஏராளமான தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடந்து வரும் நிலையில், அடுத்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையில், தனியார் பள்ளி நிர்வாகத்தினர் ஈடுபட துவங்கி உள்ளனர்.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த, அரசு பள்ளிகளில் படித்து, கல்லுாரியில் சேரும் மாணவியருக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்குதல், இளநிலைத் தொழிற்கல்வி பட்டப்படிப்பில் 7.5 சதவீத ஒதுக்கீடு வழங்குதல், தொடக்கப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி வழங்குதல் என, பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
ஆனால், தனியார் பள்ளி நிர்வாகத்தினர் மாணவர் சேர்க்கைக்கென தனி குழு அமைத்து, பேருந்துகள் வாயிலாக கிராமங்களுக்குச் சென்று, தங்களது பள்ளியின் வசதி மற்றும் சிறப்புகள், வகுப்புக்கு ஓர் ஆசிரியர், சுகாதார வசதிகள், பள்ளி வாகனங்கள் பற்றி பொதுமக்களிடம் பேசுகின்றனர்.
மேலும், கடந்த ஆண்டுகளில் பள்ளி மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தேர்ச்சி விகிதம், விளையாட்டுப் பயிற்சி, யோகா, கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட பயிற்சிகள் குறித்தும் விளக்கம் அளிக்கின்றனர்.
அரசின் அனைவருக்கும் கட்டாய கல்வி திருத்தச் சட்டத்தின்படி வழங்கப்படும் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ், மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச கல்வி குறித்து, கிராமப்பகுதி மக்களிடம் எடுத்துக் கூறி, அவர்களின் குழந்தைகளை தங்கள் பள்ளியில் சேர்ப்பதில், தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு பள்ளி சேரும் நிலையில் உள்ள குழந்தைகளை கண்டறிந்து, அவர்களின் பெயர், முகவரி, மொபைல் போன் எண் உள்ளிட்ட தகவல்களை பெற்று, தொலைபேசி வாயிலாக மூளைச்சலவை செய்து, குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கூடுதலாக மாணவர்களை பள்ளியில் சேர்க்கும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, பள்ளி நிர்வாகம் ஊக்கத்தொகை வழங்குவதாக கூறப்படுகிறது.
தனியார் பள்ளி நிர்வாகங்களின் இதுபோன்ற நடவடிக்கையால், அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை பாதிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், அடுத்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையில் தற்போதே கவனம் செலுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.