எட்டு அரசுப்பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா!வெளிநாடுகளுக்கு லாலாலா!
எட்டு அரசுப்பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா!வெளிநாடுகளுக்கு லாலாலா!
UPDATED : ஜூலை 27, 2024 12:00 AM
ADDED : ஜூலை 27, 2024 10:24 AM

கோவை:
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற, அரசுப்பள்ளி மாணவ மாணவியர் எட்டு பேர், வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா செல்ல,தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் இலக்கிய மன்றம், சிறார் திரைப்பட மன்றம், வானவில் மன்றம், வினாடி வினா மன்றம் செயல்பட்டு வருகிறது.
இந்த மன்றங்களின் மூலம், ஆண்டுதோறும் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, மாநில அளவில் தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களில், மாவட்ட அளவில் 8 பேர் தேர்வு செய்யப்பட்டு, தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில், வெளிநாடு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
கோவை சேரன்மாநகர் அரசுப்பள்ளி மாணவி சிவப்பிரியா, மாணவர் ராஜதுரை, கோவை அசோகபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவி இசைசுரபி, சேரிப்பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவி பிரியதர்ஷினி, காமராஜ்நகர் அரசு உயர் நிலைப்பள்ளி மணவர் விக்னேஷ், கணபதி அரசு மேல் நிலைப்பள்ளி தமிழிசை, கடம்பேஸ்வரர் மற்றும் லோகேஷ் ஆகிய எட்டு மாணவர்கள், வெளிநாடு கல்விச்சுற்றுலா செல்ல தேர்வாகி உள்ளனர்.
பள்ளிகளில் இதற்கென போட்டிகள் நடத்தப்பட்டன. உதாரணமாக, கோவை சேரன் மாநகர் அரசு பள்ளியில், இலக்கிய மன்றம் சார்பில் நடத்தப்பட்ட கவிதைப்போட்டியில், 10ம் வகுப்பு மாணவி சிவப்பிரியாவும், சிறார் திரைப்பட மன்றம் சார்பில் நடத்தப்பட்ட தனிநபர் நடிப்பு போட்டியில், மாணவர் ராஜதுரையும் வெற்றி பெற்றனர்.
இப்படி தேர்வான மாணவ மாணவியருக்கு, தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மாணவ மாணவியருக்கு, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன.

