UPDATED : மே 13, 2024 12:00 AM
ADDED : மே 13, 2024 09:36 AM

கோவை:
எட்டு மணி நேர வேலை, ஏழு மணி நேர பள்ளிப் படிப்பு என ஏழ்மைச் சூழலிலும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், அரசுப் பள்ளி மாணவர் சையம் இஸ்லம் மோண்டல், அதிக மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார்.
கோவை, ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த இவர், பத்தாம் வகுப்பு தேர்வில், 500க்கு 396 மதிப்பெண் பெற்றுள்ளார். குடும்ப சூழ்நிலை காரணமாக, மூன்று வேலைகளுக்குச் சென்றுவிட்டு, பள்ளிக்கும் சென்று படித்து சிறந்த மதிப்பெண் பெற்றுள்ளார் இம்மாணவர்.
மாணவர் சையம் இஸ்லம் மோண்டல் கூறியதாவது:
மேற்கு வங்க மாநிலம்தான் பூர்வீகம். அப்பா கோவையில் 30 ஆண்டுகளாக ஜூவல்லரி மேக்கிங் வேலை செய்து வந்தார். இரு ஆண்டுகளுக்கு முன், அம்மா மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். அதேநேரத்தில், அப்பாவுக்கும் வேலை பறிபோனது.
இதனால், நான் வேலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது. படிப்பை விடும் சூழல்தான் இருந்தது. எனது ஆசிரியர் ஒருவர்தான், படிக்க ஊக்குவித்தார். காலையில் 4:00 மணிக்கு எழுந்து, 6:00 மணி வரை 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு பேப்பர் போடுவேன். 6:30 முதல் 8:00 மணி வரை, 5 வீடுகளுக்கு உணவு டெலிவரி செய்வேன்.
பின்னர், பள்ளிக்குச் செல்வேன். பள்ளி முடித்த பின், 6:00 முதல் 9:30 மணி வரை ஜூவல்லரி மேக்கிங் வேலைக்குச் செல்வேன்.
பொதுத் தேர்வில், 396 மதிப்பெண் பெற்றதற்கு என் அம்மாதான் காரணம். அம்மா உடல்நிலை பாதிக்கப்பட்டது, என் வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. நல்ல மதிப்பெண் பெற எனது ஆசிரியர்கள் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்கள்; அவர்களுக்கு நன்றி.
எத்தனை வேலைகள் இருந்தாலும், பள்ளி நேரத்தில் படித்தாலே நல்ல மதிப்பெண் பெறலாம். வீட்டில் ஒருநாளும் படிக்க நேரம் கிடைத்ததில்லை.
எனக்கு தமிழ், ஆங்கிலம், பெங்காளி, ஹிந்தி ஆகிய 4 மொழிகள் தெரியும். ராணுவத்தில் சேர வேண்டும் என்பதுதான் ஆசை. தற்போது, பிளஸ் 1 படிக்கும் பொருளாதார சூழல் எனது வீட்டில் இல்லை. அதனால், மேற்படிப்பைத் தொடர்வேனா என்று தெரியவில்லை.
இவ்வாறு, அவர் கூறினார்.
உதவிக்கரம் நீட்டுவோர், 78458 49835 என்ற எண்ணில், மாணவரைத் தொடர்பு கொள்ளலாம்.
காலையில் 4:00 மணிக்கு எழுந்து, 6:00 மணி வரை 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு பேப்பர் போடுவேன். 6:30 முதல் 8:00 மணி வரை, 5 வீடுகளுக்கு உணவு டெலிவரி செய்வேன்.
பின்னர், பள்ளிக்குச் செல்வேன். பள்ளி முடித்த பின், 6:00 முதல் 9:30 மணி வரை ஜூவல்லரி மேக்கிங் வேலைக்குச் செல்வேன்.
திறமையான மாணவர்
ஆங்கில ஆசிரியர் யுவராஜ் கூறுகையில், ஒழுக்கத்திலும், படிப்பிலும் சிறந்த மாணவர் சையம். பல்வேறு வேலைக்குச் சென்றுவிட்டுதான் பள்ளிக்கு வருவார். அதனால் சிறிது தாமதமாக வந்தாலும் நாங்கள் எதுவும் சொன்னதில்லை. சொந்தமாக எழுதக்கூடிய திறன் பெற்றவர். போட்டித் தேர்வுகள் எழுதினால், சையம் நல்ல மதிப்பெண் பெற வாய்ப்புள்ளது. எதிர்காலத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆகக்கூடிய திறன் இவருக்கு உள்ளது, என்றார்.