சோதனை தந்த எட்டு மதிப்பெண் பகுதி: மாணவ, மாணவியர் ஷாக்
சோதனை தந்த எட்டு மதிப்பெண் பகுதி: மாணவ, மாணவியர் ஷாக்
UPDATED : ஏப் 16, 2025 12:00 AM
ADDED : ஏப் 16, 2025 11:36 AM

திருப்பூர்:
பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் சமூக அறிவியலில், எட்டு மதிப்பெண் பகுதி கடினமாக இருந்ததாக மாணவ, மாணவியர் தெரிவித்தனர். இதனால், இம்முறை சென்டம் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக, ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வு நேற்று நடந்தது. 29 ஆயிரத்து, 887 மாணவ, மாணவியரில், 29 ஆயிரத்து, 446 பேர் தேர்வெழுதினர். 441 பேர் ஆப்சென்ட் ஆகினர். இதுதவிர, 648 தனித்தேர்வர்களில், 558 பேர் தேர்வெழுதினர்.
தேர்வு குறித்து மாணவியர் கூறியதாவது:
மோனிகா: இதற்கு முன் நடந்த தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகள், பாடத்தில் இருந்து மட்டுமே கேட்கப்பட்டது. 1,2,5 மதிப்பெண் வினாக்கள் எளிதாக இருந்தது. எட்டு மதிப்பெண் வினாக்கள் மட்டும் கடினமாக இருந்தது. தரவாக படித்தவர்கள் எளிதாக பதில் அளிக்க முடியும்.
சாஷ்வதி: எட்டு மதிப்பெண் பகுதி மட்டும் கடினமாக இருந்தது. எதிர்பார்த்தவை இடம்பெறவில்லை. மற்ற அனைத்தும் எளிதாக இருந்தது. அனைவராலும் எளிதாக பதில் அளிக்கும் வகையில் இருந்தது.
சாந்தபிரியா: 1,2,5 மதிப்பெண் பகுதியில் எதிர்பார்த்தவை இடம்பெற்றிருந்தது. எளிதாக இருந்தது. பாடத்தில் இருந்து மட்டுமே கேட்கப்பட்டது. வெளியே இருந்து எதுவும் கேட்கவில்லை.
பிரியதர்ஷினி: கட்டாய வினா பகுதியில் மட்டும் கடினமாக இருந்தது. மற்றவை எல்லாம் எளிதாக இருந்தது. எட்டு மதிப்பெண் பகுதியில் நன்றாக படித்தவர்களுக்குமிகுந்த சுலபம். இதை சரியாக அணுகியவர்கள், சென்டம் அடித்து விடுவார்கள்.
சென்டம் எடுப்பது சிரமம்
தேர்வு குறித்து, பெருந் தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சுஜாதா கூறுகையில், சமூக அறிவியல் எளிதாக தான் இருந்தது. 1, 2, 5 மதிப்பெண் பகுதி எளிதாக இருந்தது. கட்டாய வினாக்கள் மட்டும், புத்தகத்துக்குள் இருந்து கேட்டுள்ளனர். எட்டு மதிப்பெண் பகுதியில் இடம்பெற்றவை, இதற்கு முன் தேர்வுகளில் கேட்டதில்லை. தரவாக படித்தவர்கள் எளிதாக பதில் அளித்திருப்பார்கள். சென்டம் எளிதாக எடுக்க முடியாது, என்றார்.
மாணவர்கள் மகிழ்ச்சி
கடந்த மார்ச், 28ம் தேதி துவங்கிய தேர்வு குறிப்பிட்ட இடைவெளியில் தேர்வுகள் நடந்தன. இந்நிலையில் கடைசி தேர்வான சமூக அறிவியல் நேற்று முடிந்தது. அனைத்து தேர்வுகளும் முடிவடைந்த நிலையில், மாணவ, மாணவியர் ஒருவருக்கொருவர் வாழ்த்து சொல்லி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டனர். தங்களது ஆசிரியர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பள்ளியில் நடந்த மகிழ்ச்சியான சம்பவத்தை பகிர்ந்து கொண்டனர்.