செமி கண்டக்டர், ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் குவியும் வேலைவாய்ப்புகள்: அமைச்சர் சவுத்ரி
செமி கண்டக்டர், ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் குவியும் வேலைவாய்ப்புகள்: அமைச்சர் சவுத்ரி
UPDATED : செப் 25, 2025 09:01 AM
ADDED : செப் 25, 2025 09:04 AM

சென்னை:
''செமி கண்டக்டர், ஏ.ஐ., தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருவதோடு, வேலைவாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன. மாணவர்கள், இளைஞர்களுக்கு தரமான பயிற்சிகளை, மத்திய அரசு வழங்கி வருகிறது,'' என மத்திய இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி கூறினார்.
மத்திய அரசின் சார்பில், சென்னையில் நேற்று திறன் மேம்பாடு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்பட்டது. தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் செயல்படும் திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவன நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பேசியதாவது:
தேசிய தொழில் கல்வி மற்றும் பயிற்சி கவுன்சில் , திறன் மேம்பாட்டை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. புதிய தேசிய கல்வி கொள்கையில், திறன் மேம்பாடு என்பது பிரதான கல்வியாக இணைக்கப்பட்டுஉள்ளது. கல்வியுடன், தொழில் பயிற்சிகள் அவசியமாக இருக்கின்றன.
வளமான திறன்கள் இது, கல்விக்கும், வேலைவாய்ப்புக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க உதவும். நம் நெசவாளர்கள், கைவினைஞர்களின் பாரம்பரிய கைவினைத் திறன் முதல் பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்களின் அதிநவீன கண்டுபிடிப்புகள் வரை, எப்போதும் வளமான திறன்களை கொண்ட நாடாக, இந்தியா இருக்கிறது.
வேளாண்மை, உற்பத்தி, சேவைகள் அல்லது ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், செமி கண்டக்டர் போன்ற உயர் தொழில்நுட்பத் துறைகளில், வளர்ச்சி மற்றும் வாய்ப்புகள் குவிந்துள்ளன.
இதற்காக, இளைஞர்களுக்கு தரமான பயிற்சிகளை வழங்க, மத்திய அரசு திட்டமிட்டு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு, 'ட்ரோன்' தொழில்நுட்பம் மற்றும் 'சைபர்' பாதுகாப்பு போன்ற புதிய பயிற்சிகளும் ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., போன்ற கல்வி நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன.
திறன் மேம்பாடு என்பது வெறும் அரசு திட்டம் மட்டுமல்ல; அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதன் வாயிலாகவே முன்னேற்றம் ஏற்பட்டு, முழு வளர்ச்சி பெற முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நல்ல பலன்
தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலர் வீரராகவ ராவ் பேசியதாவது:
'ஆட்டோமொபைல்' உட்பட பல்வேறு தொழில்களில், தமிழகம் முன்னணியில் இருக்கிறது. தொழில் நிறுவனங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் இடையே, ஒரு இடைவெளி இருக்கிறது.
இதை பூர்த்தி செய்யவே, தமிழக அரசு சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, 'நான் முதல்வன்' திட்டம் வாயிலாக அளிக்கப்படும் பயிற்சிகள் நல்ல பலனை அளித்து வருகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.