இன்ஜினிரியங்,கலை அறிவியல் கவுன்சிலிங் டல்: 40 சதவீத மாணவர்கள் மட்டுமே சேர்ந்தனர்
இன்ஜினிரியங்,கலை அறிவியல் கவுன்சிலிங் டல்: 40 சதவீத மாணவர்கள் மட்டுமே சேர்ந்தனர்
UPDATED : ஜூலை 30, 2024 12:00 AM
ADDED : ஜூலை 30, 2024 09:49 AM

புதுச்சேரி:
நீட் அல்லாத படிப்புகளில் முதற்கட்ட கலந்தாய்வில் சீட் கிடைத்த மாணவர்களில் 40 சதவீதம் பேர் கல்லுாரியில் சேர்ந்தனர்.
நீட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையில்லாத படிப்புகளுக்கு சென்டாக் மூலம் அன்மையில் முதற்கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டது. மொத்தம் 7080 பேருக்கு முதற்கட்ட கலந்தாய்வில் சீட் ஒதுக்கப்பட்டது. இதில் 3,212 மாணவர்கள், 3,868 மாணவிகள் சேர்க்கை பெற்றனர். இன்ஜினியரிங் படிப்பில் 3,011 பேரும், கலை அறிவியல் படிப்புகளில் 3,496 பேருக்கும் சீட் ஒதுக்கப்பட்டது. இதுதவிர தொழிற்கல்வி படிப்புகளுக்கு சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சீட் கிடைத்த மாணவர்கள் கடந்த 18 ம்தேதி வரை இடம் கிடைத்த கல்லுாரியில் சேர்க்க அறிவுறுத்தப்பட்டனர். இதன்படி சீட் கிடைத்த கல்லுாரிகளில் பணம், சான்றிதழ்களை கொடுத்து மாணவர்கள் சேர்ந்தனர். இதில், முதற்கட்ட கலந்தாய்வில் சீட் கிடைத்த மாணவர்களில் குறைவான மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். குறிப்பாக கலை அறிவியல், இன்ஜினியரிங் படிப்புகளில் 40 சதவீதம் பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். 60 சதவீத இடங்கள் காலியாக உள்ளன.
வழக்கமாக எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம் உள்ளிட்ட உயிரியல் சார்ந்த படிப்புகளுக்கு முதலில் கவுன்சிலிங் நடத்தப்படும். எம்.பி.பி.எஸ்., கவுன்சிலிங்கில் சீட் கிடைக்காத மாணவர்கள் அடுத்து இன்ஜினியரிங் படிப்புகளையும், துணை மருத்துவ படிப்புகளையும் தேர்வு செய்வர். இதில் இடம் கிடைக்காவிட்டால் கடைசியாக கலை அறிவியல் படிப்புகள் பக்கம் வருவர்.
ஆனால், இந்தாண்டு கவுன்சிலிங் காலதாமதத்தை தவிர்க்கும் வகையில் கலை அறிவியல், இன்ஜினிரிங் உள்ளிட்ட நீட் மதிப்பெண் அல்லாத படிப்புகளுக்கு முன் கூட்டியே முதலில் கவுன்சிலிங் நடத்தப்பட்டது.
இருப்பினும், எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், துணை மருத்துவ படிப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கும் மாணவர்கள் கலை அறிவியல், இன்ஜினிரியங் படிப்புகளில் சீட் கிடைத்தும் அந்த கல்லுாரியில் சேரவில்லை. இதன் காரணமாகவே 60 சதவீதம் காலியிடம் ஏற்பட்டுள்ளது.
2-வது கவுன்சிலிங் எப்போது:
நீட் அல்லாத படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு டல் அடித்துள்ள சூழ்நிலையில் 2-வது கவுன்சிலிங்கை நடத்தினால் கூடுதலாக 10 சதவீத பேர் மட்டுமே சேர வாய்ப்பு ஏற்படும். அப்படியே சீட் எடுத்தாலும், அந்த சீட்டினை கைகழுவிட்டு மீண்டும் மருத்துவ படிப்புகள் பக்கம் தாவி விடுவர். இதனால், மீண்டும் கவுன்சிலிங் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
எனவே எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட நீட் மதிப்பெண் அடிப்படையிலான படிப்புகளுக்கு முதலில் கவுன்சிலிங் நடத்தி விட்டு, அதன் பிறகு கலை அறிவியல், இன்ஜினியரிங் படிப்புகளுக்கு இரண்டாவது கட்ட கவுன்சிலிங் நடத்தலாம் என முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அரசின் கவனத்திற்கும் ஒப்புதலுக்காக கொண்டு சென்றுள்ளது.