எதிர்காலத்தை ஆளப்போகும் இன்ஜினியரிங் படிப்புகள்: பேராசிரியர் பென்ரூபன் பேச்சு
எதிர்காலத்தை ஆளப்போகும் இன்ஜினியரிங் படிப்புகள்: பேராசிரியர் பென்ரூபன் பேச்சு
UPDATED : மார் 30, 2024 12:00 AM
ADDED : மார் 30, 2024 05:28 PM

புதுச்சேரி:
மென் திறன்களையும் வளர்த்துக்கொண்டால் தான் எதிர்காலத்தில் வேலை வாய்ப்பு வசப்படும் என பேராசிரியர் பென்ரூபன் பேசினார்.
தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் ஸ்ரீகிருஷ்ணா காலேஜ் ஆப் இன்ஜினியரிங் டெக்னாலஜி கல்லுாரி பேராசிரியர் பென்ரூபன் பேசியதாவது:
சிவில், மெக்கானிக், எலக்ட்ரீக்கல், எலக்ட்ரானிக்ஸ் என அடிப்படை கோர் இன்ஜினியரிங் படிப்புகள் உள்ளன. என்னதான் புதுப்புது பொறியியல் படிப்புகள் வந்து கொண்டிருந்தாலும், இந்த அடிப்படை பொறியயல் படிப்புகளுக்கும் என்றைக்குமே மவுசு இருந்து கொண்டே தான் இருக்கும்.
உலகை ஆளப்போகும் எதிர்கால பொறியியல் படிப்புகளும் அசுரமாக அனைத்து துறைகளிலும் வளர்ச்சியடைந்து வருகின்றன. இவற்றில் வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.
அவற்றில், ஆர்ட்டிபிஷியல் இன்டிலிஜென்ஸ் அண்ட் மெக்கானிக் லேர்னிங், இண்டர்நெட் ஆப் திங்க்ஸ், சைபர் செக்யூரிட்டி, ரோபாட்டிக்ஸ் ஆட்டோமேஷன், பையோ டெக்னாலஜி அண்ட் பையோ இன்ஜினியரிங், அட்வான்ஸ்டு மெட்ரீயல்ஸ், சுற்றுச்சூழல் பொறியியல், அக்ரிகல்சர் இன்ஜினியரிங் என எதிர்காலத்தை ஆளும் படிப்புகள் மிக முக்கியமானவை. இந்த தொழில் நுட்பங்களைச் சார்ந்த பொறியியல் பிரிவுகளைத் தேர்ந்தெடுத்து எதிர்காலத்தை பிரகாசப்படுத்திக் கொள்ளலாம்.
இந்த படிப்புகளில் பையோ டெக்னாலஜி அண்ட் பையோ இன்ஜினியரிங்முடித்தவர்களுக்கு அரசு வேலைக்கு தேவைப்படுகின்றனர். மேலும் இப்படிப்பு படித்தவர்கள் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் ஆராய்ச்சி படிப்பினை தொடர்ந்து படிக்கலாம். சொந்தமாக மருத்துவ கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து மனித குலத்திற்கும், சமூகத்திற்கும் பங்காற்றலாம். கொரோனாவில் உலகம் முடங்கியபோது கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்து இத்துறை தான் மனித குலத்தை காப்பாற்றியது.
இது மொபைல் உலகம். இணையத்தில் வலைவீசினால் உங்களுக்குத் தெளிவு பிறக்கும். சிறந்த கல்லுாரிகளை அறிந்து அதற்கு ஏற்ப முடிவுகளை எடுக்கலாம். பொறியியல் பிரிவைத் தேர்ந்தெடுக்கும்போது அப்பிரிவுக்கான வேலை வாய்ப்புகளை அலசிப் பார்ப்பது நல்லது. எதுவாக இருந்தாலும், இன்ஜினியரிங் படிக்கும் போது, மூன்றாம் ஆண்டில் பிரபல நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூ நடத்துகின்றன.
இந்த நிறுவனங்கள், உங்களிடம் உள்ள கம்யூனிகேஷன் ஸ்கில்சை பார்க்கின்றன. கம்யூனிகேஷன் ஸ்கில் என்ற சாப்ட் கில்ஸ் உங்களிடம் இருந்தால் வேலைவாய்ப்பில் பாதி கிணற்றை தாண்டிவிடலாம்.
எனவே ஒரு விஷயத்தை ஆங்கிலத்தில் எப்படி சொல்கின்றீர்கள், அதற்கான தீர்வினை எப்படி முன் வைக்கின்றீர்கள் என்பதை நிறுவனங்கள் பார்த்தே வேலைக்கு எடுக்கின்றன. எனவே எந்த பொறியியல் படிப்பு படித்தாலும் மென் திறன்களையும் வளர்த்துக் கொண்டால் தான் எதிர்காலத்தில் வேலை வாய்ப்பு வசப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.