பொறியியல் தரவரிசைப் பட்டியல் கோவை மாணவி இரண்டாமிடம்
பொறியியல் தரவரிசைப் பட்டியல் கோவை மாணவி இரண்டாமிடம்
UPDATED : ஜூலை 12, 2024 12:00 AM
ADDED : ஜூலை 12, 2024 09:25 AM
கோவை:
பொறியியல் தரவரிசையில், 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ், கோவை மாணவி கிருஷ்ணா அனுாப், மாநிலத்தில் இரண்டாமிடம் பிடித்துள்ளார்.
தமிழ்நாடு பொறியியல் படிப்புக்கான, தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி, 6 முதல், பிளஸ் 2 வகுப்பு வரை, அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ராவினி முதலிடத்தையும், கோவை மாவட்ட மாதிரி அரசுப் பள்ளியில் பயின்ற மாணவி கிருஷ்ணா அனூப் இரண்டாம் இடத்தையும், வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் சரவணன், மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
இரண்டாமிடம் பிடித்த மாணவி கிருஷ்ணா அனுாப்பின் பெற்றோர் வித்யா மற்றும் ரவி அனுாப் ஆகிய இருவரும், கோவை எட்டிமடை அமிர்தா பல்கலை ஆய்வகத்தில் பணிபுரிகின்றனர்.
மாணவி கிருஷ்ணா அனூப் கூறுகையில், பிளஸ் 2 தேர்வில் கணிதம், கணினி அறிவியலில் சென்டம் கிடைத்தது. மொத்தம் 600க்கு 593 மதிப்பெண் பெற்றேன். பொறியியல் தரவரிசைப் பட்டியலில், 198.5 கட் ஆப் மதிப்பெண் பெற்று மாநிலத்தில் இரண்டாம் பிடித்துள்ளது, மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.
நான் அதிக மதிப்பெண் பெற பெற்றோர், ஆசிரியர்கள்தான் காரணம். பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவைத் தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளேன். பி.எஸ்.ஜி., கல்லூரியை முதல் சாய்சாகவும், அண்ணா பல்கலையை இரண்டாவது சாய்ஸாகவும் தேர்ந்தெடுக்க உள்ளேன், என்றார்.