UPDATED : ஏப் 03, 2025 12:00 AM
ADDED : ஏப் 03, 2025 08:56 AM
சிவகங்கை:
பத்தாம் வகுப்பு ஆங்கில தேர்வு மிகவும் எளிமையாக இருந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மிகவும் எளிமை
கே.தாரணி, அலிஸ் மில்லர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி, சிவகங்கை: ஆங்கிலத் தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் அனைத்தும் மிகவும் எளிமையாக இருந்தது. எதிர்பார்த்த வினாக்கள் வந்திருந்தன. புத்தகத்தில் இருந்து மட்டும் வினாக்கள் கேட்கப்பட்டதால் அனைவரும் 90 மதிப்பெண்ணுக்கு மேல் எடுக்க முடியும். அனைத்து மாணவர்களும் எளிதில் தேர்ச்சி அடைய முடியும்.மகிழ்ச்சியாக உள்ளது.
ஒரு மதிப்பெண் வினா கடினம்
எம்.களஞ்சியம், சுவாமி விவேகானந்தா உயர்நிலைப்பள்ளி, சிவகங்கை: ஒரு மதிப்பெண் வினா மட்டும் கடினமாக இருந்தது. ஐந்து மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் படித்த வினாக்களே கேட்கப்பட்டது. எல்லா வினாக்களுக்கும் விடை அளித்துள்ளோம். எதிர்பார்க்கப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதால் எளிதில் விடை அளிக்க முடிந்தது.90 மதிப்பெண்களுக்கு மேல் நிறைய மாணவர்கள் எடுக்க வாய்ப்பு உள்ளது.
அதிக மதிப்பெண் வாங்கலாம்
டி.மோனிஷ் கண்ணன், மன்னர் மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை: ஐந்து மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் மிகவும் எளிமையாக இருந்தது. அனைத்து வினாக்களும் புத்தகத்திலிருந்து கேட்கப்பட்டன. ஆசிரியர் கூறிய அனைத்து முக்கிய வினாக்களும் கேட்கப்பட்டன. அனைத்து மாணவர்களும் எளிதில் தேர்ச்சி பெற முடியும். 95க்கு மேல் பலர் மதிப்பெண் எடுக்க முடியும்.
மிகவும் மகிழ்ச்சி
ஜி.மதுஹினா, சாம்பவிகா உயர்நிலைப்பள்ளி, சிவகங்கை: தேர்வு மிகவும் எளிமையாக இருந்தது. நாங்கள் எதிர்பார்த்தகேள்விகள் அனைத்தும் கேட்கப்பட்டன. ஒரு மதிப்பெண் வினா இரண்டு வினா மட்டும் கொஞ்சம் கஷ்டமாக இருந்துச்சு. அதற்கும் சரியாக விடை அளித்துள்ளோம். புத்தகத்தில் இருந்து மட்டும் கேள்விகள் கேட்கப்பட்டதால் விடையளிக்க மிகவும் எளிமையாக இருந்தது. மிகவும் சந்தோஷமாக தேர்வு எழுதியுள்ளோம் நிறைய மாணவர்கள் 100 மதிப்பெண் பெற வாய்ப்புள்ளது.
அதிகம் சென்டம்
பி.மகரஜோதி, ஆங்கில ஆசிரியர், சாம்பவிகா மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை: 10 மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் எதிர்பார்த்த வினாக்களே இருந்தது. இரண்டு மதிப்பெண் ஐந்து மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் எளிமையாக இருந்தது. மெமரிஸ், போயம் எதிர்பார்த்தது கேட்கப்பட்டது.
இதனால் மாணவர்கள் எளிமையாக விடை அளித்திருக்க முடியும். மாணவர்கள் அனைவருமே வினாத்தாள் எளிமையாக இருந்தது என்று கூறினர். மிகவும் சந்தோஷத்துடன் காணப்படுகின்றனர். இந்த முறை நிறைய மாணவர்கள் நுாற்றுக்கு நுாறு எடுக்க அதிக வாய்ப்பு உள்ளது என்றார்.

