ஐடியா போதும்; தொழில்முனைவோராக்க நாங்க தயார்! 589 ஸ்டார்ட் அப்களை உருவாக்கி டி.பி.ஐ., அசத்தல்
ஐடியா போதும்; தொழில்முனைவோராக்க நாங்க தயார்! 589 ஸ்டார்ட் அப்களை உருவாக்கி டி.பி.ஐ., அசத்தல்
UPDATED : அக் 14, 2024 12:00 AM
ADDED : அக் 14, 2024 03:14 PM

கோவை:
தொழில் துவங்குவதற்கான திட்டம் மட்டும் இருக்கிறது; எப்படி ஆரம்பிப்பது என யோசிப்பவர்களை, தொழில்நுட்பம் மற்றும் நிதி உட்பட அனைத்து ஆலோசனைகளையும் வழங்கி, இதுவரை, 589 ஸ்டார்ட் அப்கள் துவங்க கைகொடுத்திருக்கிறது, கோவை வேளாண் பல்கலை வளாகத்தில் செயல்படும் தொழில்நுட்ப வணிகக் காப்பகம் (டி.பி.ஐ.,).
இது தொடர்பாக, வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தின் நிர்வாக இயக்குநர் ஞானசம்பந்தம் கூறியதாவது:
வேளாண் சார்ந்த ஸ்டார்ட் அப்களை ஊக்குவிக்க, 2011ல் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை உதவியுடன், தொழில்நுட்ப வணிகக் காப்பகம் நிறுவப்பட்டது. உணவு, பண்ணை இடுபொருட்கள், இயந்திரங்கள், உணவுத்துறை சார்ந்த உபகரணங்கள், விதை, வேளாண் கழிவுகளை மறுசுழற்சி அல்லது மறுபயன்பாட்டுக்கு உகந்ததாக மாற்றுதல் போன்ற வேளாண் சார்ந்த ஸ்டார்ட் அப் துவங்க மட்டும் தேவையான அனைத்து உதவிகளையும் தொழில்நுட்ப வணிகக் காப்பகம் செய்கிறது.
மத்திய அரசின் ஐந்து திட்டங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. மத்திய வேளாண் துறையின் ஒரு திட்டத்தில் ரூ.8 கோடிக்கு, 100 சதவீத மானியம் பெற்றுத் தரப்பட்டுள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் இ.ஐ.ஆர்., திட்டத்தில், ஆண்டுக்கு, 10 பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் ஊக்கத்தொகையுடன் பயிற்சி வழங்கப்படுகிறது.
மத்திய தொழில்துறையின் சீடு திட்டத்தில், ரூ. 20 லட்சம் வரை நிதி, ரூ.50 லட்சம் வரை முதலீடு உள்ளிட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கும், நிதி பிரயாஸ் திட்டம் வேளாண் பல்கலையில் மட்டும் செயல்படுத்தப்படுகிறது. மாநில அரசின், இ.டி.ஐ.ஐ., திட்டத்தில் ரூ.5 லட்சம் வரை, 100 சதவீத மானிய திட்டங்கள் உள்ளன.
தற்போது நறுமணப் பொருள் வாரியம், 3 ஸ்டார்ட் அப்களுக்கு தலா ரூ.10 லட்சம் என, ரூ.30 லட்சம் ஒதுக்கியுள்ளது. மிளகு, ஏலம், லவங்கம், கிராம்பு, மஞ்சள், பட்டை, கிராம்பு உள்ளிட்ட நறுமணப் பொருட்களை மதிப்புக்கூட்டி, புதிய பொருளாக மாற்றி உருவாக்கும் ஸ்டார்ட் அப்களுக்கு இந்த நிதியுதவி வழங்கப்படும்.
தமிழக அரசு டி.என்.,சீடு திட்டத்தில், ரூ.10 லட்சம் மானியம் தருகிறது. தொழில் துவங்க ரூ.15 லட்சத்தை முதலீடு செய்கிறது. தொழில்துவங்க ஐடியா இருப்பின், எப்படி மேம்படுத்துவது, மாதிரி உற்பத்திப் பொருளை உருவாக்குவது, அதை முழு தயாரிப்பாக மாற்றுவது, தொழில்நுட்ப உதவிகள், ஆலோசனை, மானியத்துடனான நிதி உதவி, காப்புரிமை, தொழில்துவங்க உரிமங்கள், சான்றுகள், சிப்பமிடுதல், பிராண்டிங், சந்தைப் படுத்துதல், என, அனைத்து உதவிகளையும் வழங்குகிறோம். இதுவரை, 589 ஸ்டார்ட் அப்களை உருவாக்கி, வெற்றிகரமாக வழி நடத்தியுள்ளோம்.
பல்கலை வளாகத்தில் இரு ஆய்வகங்கள் உள்ளன. பகுப்பாய்வுக்கான கட்டணத்தில் 33 சதவீதம் விலக்கு கொடுக்கிறோம். இங்குள்ள இன்குபேஷன் மையத்திலேயே அலுவலகம் அமைக்க, மிகக்குறைந்த வாடகையில் இடம் அளிக்கிறோம். இங்குள்ள இயந்திரங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம். உற்பத்திப் பொருளை விற்பனை செய்ய, விற்பனை மையமும் துவக்கப்பட்டுள்ளது. வேளாண் தொழில் சார்ந்த ஐடியா இருந்தால் மட்டும் போதும். ஸ்டார்ட் அப் உருவாக்கலாம்; நாங்கள் உதவுகிறோம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.