UPDATED : மே 22, 2024 12:00 AM
ADDED : மே 22, 2024 10:46 AM

பொள்ளாச்சி:
கிராமங்களில் உள்ள அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை குறைந்தே காணப்படுவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒரு பள்ளியில், குறைந்தபட்சம், 20 மாணவர்கள் இருத்தல் வேண்டும்; மாணவர் சேர்க்கையை அதிகரிக்கச் செய்தல் வேண்டும் என, ஒவ்வொரு கல்வியாண்டிலும், ஆசிரியர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
அவ்வகையில், பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில், வரும் கல்வியாண்டில், மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தற்போது, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன. ஆனால், கிராமப்புறங்களில் உள்ள அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்தே காணப்படுவதாக, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
அரசு பள்ளிகளில், மாணவர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள், பள்ளியின் சிறப்பான செயல்பாடுகள் குறித்து, விளம்பரப் பலகை தயார்படுத்தப்பட்டும், மக்களிடையே நேரடியாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இருப்பினும், கடந்தாண்டை ஒப்பிடுகையில், கிராமப்புறங்களில் உள்ள அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்தே காணப்படுகிறது. கிராமங்களில் உள்ள துவக்கப் பள்ளிகளில் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டுமே இருப்பதே இதற்கு காரணமாகும்.
குறிப்பாக, சில பள்ளிகளில், 10க்கும் குறைவாகன எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ளனர். அதேநேரம், நகர்ப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.