பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வது கட்டாயம்: கவர்னர் ரவி பேச்சு
பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வது கட்டாயம்: கவர்னர் ரவி பேச்சு
UPDATED : பிப் 01, 2025 12:00 AM
ADDED : பிப் 01, 2025 11:00 AM

ஸ்ரீபெரும்புதுார்:
சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி, பெற்றோர் தங்கள் பெண் குழந்தைகளை, சென்னை அனுப்ப மறுக்கின்றனர் என, கவர்னர் ரவி தெரிவித்தார்.
அகில இந்திய மகளிர் சங்கத்தின் 93வது மாநாடு, காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் உள்ள பிரம்மகுமாரிகள் மையத்தில் நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக தமிழக கவர்னர் ரவி பங்கேற்று, பெண்கள் பாதுகாப்பு குறித்த கள ஆய்வு அறிக்கையை வெளியிட்டார்.
அப்போது, அவர் பேசியதாவது:
தமிழகத்திலிருந்து மட்டுமின்றி, வெளி மாநிலத்தில் இருந்து, ஏராளனமான பெண்கள் பங்கேற்று உள்ளீர்கள். தமிழகம் பாரம்பரியமிக்க அழகான மாநிலம். நேரம் கிடைக்கும் போது, நீங்கள் தமிழகத்தை முழுமையாக சுற்றிப் பார்க்க வேண்டும். ஆன்மிகம், உணவு, கலாசாரம் என, அனைத்தும் தமிழகம் முழுதும் நிறைந்துள்ளன.
நுாறு ஆண்டுகள் சிறப்பு மிக்க, இந்த மகளிர் இயக்கம், பெண்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு மிகவும் உறுதுணையாக செயல்பட்டு வருகிறது. பெண்கள் பாதிக்கப்படும் போது, அவர்களுக்கு மிகவும் நம்பகமான குரலாக இந்த இயக்கம் உள்ளது. தற்போது, அனைத்து துறைகளிலும், பெண்கள் முன்னிலையில் உள்ளனர்.
பல்கலை பட்டமளிப்பு விழாக்களில், மாணவர்களை காண்பது மிகவும் கடினமாக உள்ளது. 90 சதவீதம் மாணவியர் தான் உள்ளனர். அதேபோல், நாட்டின் வளர்ச்சியில், பெண்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
நாடு முழுதும் உயர்கல்வியில் பெண்கள் தங்கப்பதக்கம் அதிகம் பெறுகின்றனர். ஆனால், தற்போது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலையில், பட்டமளிப்பு விழாக்களுக்கு செல்லும் போது, தங்கப்பதக்கம் பெற்ற மாணவியருடன் கலந்துரையாடுவது வழக்கம்.
அப்போது, பெற்றோர் தங்களை சென்னைக்கு செல்ல அனுமதிக்க மறுக்கின்றனர். பெண்களுக்கு இங்கு பாதுகாப்பு இல்லாததே, அதற்கு காரணம் எனக் கண்ணீருடன் கூறுகின்றனர். எனவே, பெரு நகரங்களில் பெண்களின் பாதுப்பை உறுதி செய்வது கட்டாயமாகி உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.