வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் தாய் மொழியை மறக்க கூடாது
வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் தாய் மொழியை மறக்க கூடாது
UPDATED : ஜூன் 26, 2024 12:00 AM
ADDED : ஜூன் 26, 2024 08:31 AM
சிதம்பரம்:
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த பின்னத்துார் ராமநாதேஸ்வரர் கோவிலில், 119வது சைவ சித்தாந்த பெருமன்ற இரண்டு நாள் மாநாடு நடந்தது.
மன்ற செயற்குழு உறுப்பினர் தட்சிணாமூர்த்தி வரவேற்றார். தமிழ்நாடு பவுண்டேஷன் முதன்மை செயலாளர் இளங்கோ மாநாட்டை துவக்கி வைத்தார். சைவ சித்தாந்த பெருமன்ற தலைவரான சென்னை பல்கலை சைவ சித்தாந்த துறை தலைவர் சரவணன் அறிமுக உரையாற்றினார். அண்ணாமலை பல்கலை துணைவேந்தர் கதிரேசன், சைவம் சித்தாந்தம் தொடர்பான 5 நூல்களை வெளியிட்டு பேசினார்.
பழநி ஆதீனம் சாது சண்முக அடிகளார் அருளாசி வழங்கிப் பேசுகையில், வேதாந்தம் உலகம் முழுவதும் பரவி உள்ளது. உலக சமயங்கள் பற்றி நாம் அனைவரும் தெரிந்து கொள்வதற்காக அது தொடர்பான நூல்களை வெளியிட வேண்டும். வழிபாட்டிற்கு மொழி ஒரு தடையாக இருக்க முடியாது. வெளிநாடுகளில் வாழ்பவர்கள், 20 ஆண்டுகள் அங்கு இருந்துவிட்டால், தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் பேச வராது என்கின்றனர். அவ்வாறு இருக்கக்கூடாது, தாய் மொழியை என்றும் மறக்கக்கூடாது என்றார்.
மாநாட்டில், சின்னவேடம்பட்டி ராமானந்த குமரகுருபர அடிகளார், சென்னை பல்கலை பதிவாளர் ஏழுமலை, மன்ற செயலாளர் கமல சேகரன் உள்ளிட்டோர் பேசினர்.