அரசுக்கு ரூ.2 லட்சம் வைப்பு தொகை செலுத்தியும் பயனில்லை
அரசுக்கு ரூ.2 லட்சம் வைப்பு தொகை செலுத்தியும் பயனில்லை
UPDATED : ஜூலை 24, 2024 12:00 AM
ADDED : ஜூலை 24, 2024 09:38 AM
மறைமலை நகர்:
மறைமலை நகரின் மையப் பகுதியில் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதில், 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயில்கின்றனர்.
இந்த பள்ளியில், கூடலுார், காட்டாங்கொளத்துார், காட்டூர், சித்தமனுார், கலிவந்தப்பட்டு, பேரமனுார் உள்ளிட்ட, 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, ஏழ்மையான குடும்ப சூழல் கொண்ட மாணவ, மாணவியர் பயில்கின்றனர்.
நீண்ட நாள் கோரிக்கை
இந்த இருபாலர் படிக்கும் பள்ளியை பிரித்து, தனியாக பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைக்க வேண்டும் என, பெற்றோர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
மறைமலை நகரில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், வேலை தேடி வந்து குடியேறி உள்ளனர். இங்கு, பொருளாதார வசதி குறைந்த பலர், தங்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர்.
பெண்களுக்கு என, இந்த பகுதியில் பெண்கள் மேல்நிலைப் பள்ளி இல்லாததால், 10 கி.மீ., தொலைவில் உள்ள நந்திவரம் - கூடுவாஞ்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு மாணவியரை பெற்றோர் அனுப்பி வருகின்றனர்.
அங்கு பேருந்து பிடித்து சென்று வர, மாணவியர் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே, மறைமலை நகர் அரசு பள்ளியை, இரண்டாக பிரித்து தனியாக பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
கல்வித்துறை அதிகாரிகளால் கோரிக்கை ஏற்கப்பட்டு, அரசுக்கு ஒவ்வொரு கல்வியாண்டும் கருத்துரு அனுப்பப்பட்டு வருகிறது.
அரசு நடவடிக்கை
மறைமலை நகர் குடியிருப்போர் நலச்சங்கம் வாயிலாக, கடந்த 2018ம் கல்வியாண்டில், அரசுக்கு 2 லட்ச ரூபாய் வைப்பு தொகை செலுத்தியும், இப்பகுதி மக்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
பெண்கள் மேல்நிலைப் பள்ளி இல்லாததால், பலர் தங்களின் பெண் குழந்தைகளை பத்தாம் வகுப்புடன் நிறுத்தி விடுகின்றனர். எனவே, பெண் கல்வியின் முக்கியத்துவம் கருதி, மறைமலை நகர் பகுதியில் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அமைச்சரின் வாக்குறுதி என்னாசு?
கடந்த மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில், செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி, மறைமலை நகரில் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைப்பது குறித்து வலியுறுத்தினார்.
அவர் சட்டசபையில் பேசியதாவது:
செங்கல்பட்டு தொகுதி, மறைமலை நகரில் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைக்க வேண்டும் என்பது, நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.மறைமலை நகரில் மேல்நிலைப் பள்ளி இருந்தும், பெற்றோர்கள் நத்திரவரம் - கூடுவாஞ்சேரி பகுதியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவியரை சேர்க்கின்றனர். அங்கு, 3,000க்கும் மேற்பட்ட மாணவியர், தற்போது பயில்கின்றனர்.
எனவே, மறைமலை நகரில் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பதில் கூறுகையில், சட்டசபை உறுப்பினர் கேட்டது போல், அங்கேயிருக்கின்ற கல்வி சார்ந்த அலுவலர்கள் வாயிலாக கருத்துரு கேட்கப்பெற்று, வாய்ப்பிருப்பின் நிச்சயமாக செய்து தரப்படும், என உறுதியளித்தார்.

