UPDATED : மார் 29, 2024 12:00 AM
ADDED : மார் 29, 2024 05:04 PM

சென்னை:
ரம்ஜான் பண்டிகையையொட்டி, பள்ளி ஆண்டு இறுதி தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு பாடத்திட்டத்தில், ஒன்று முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஆண்டு இறுதி தேர்வுகள், ஏப்., 2 முதல் 12 வரை நடக்கும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. ஏப்ரல், 10 அல்லது 11ல் ஏதாவது ஒரு நாள், ரம்ஜான் பண்டிகை வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால், தேர்வு கால அட்டவணையை மாற்றும்படி, பெற்றோர் மற்றும் ஆசிரியர் தரப்பில் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்ய, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதன்படி, ஏப்., 10, 12ம் தேதி நடக்க உள்ள தேர்வுகள், வரும், 4, 6ம் தேதிக்கு மாற்றப்பட உள்ளன. இதற்கான முன் தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மாற்றப்பட்ட தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்படும் என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். புதிய அட்டவணைப்படி, ஏப்., 12க்கு பதில், 8ம் தேதியிலேயே அனைத்து தேர்வுகளும் நிறைவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.