கோச்சிங் சென்டரில் வெடி விபத்து: மாணவர்கள் இருவர் பலி; 10 பேர் படுகாயம்
கோச்சிங் சென்டரில் வெடி விபத்து: மாணவர்கள் இருவர் பலி; 10 பேர் படுகாயம்
UPDATED : அக் 05, 2025 09:03 AM
ADDED : அக் 05, 2025 09:04 AM
கான்பூர்:
உ.பி., மாநிலம் பரூக்காபாத்தில் கோச்சிங் சென்டரில் ஏற்பட்ட வெடி விபத்தில் மாணவர்கள் இருவர் பலியாகினர். 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
பரூக்காபாத் மாவட்டம் சாத்தான்பூர் மண்டி அருகே கோச்சிங் சென்டர் மற்றும் நூலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பள்ளி குழந்தைகள் பலர் படிக்கின்றனர். இந்த மையத்தில் இன்று பகல் 2.30 மணிக்கு பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது.
இதனால் அந்தக் கட்டடமே இடிந்து நொறுங்கியது. அங்கிருந்த பலர் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தனர். காயம் அடைந்த மாணவர்கள் இருவர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்குள் உயிரிழந்துவிட்டனர். பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
வெடி விபத்து தாக்கம் காரணமாக அருகே உள்ள பல கட்டடங்களில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. கட்டடத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட இரும்பு கிரில் 150 மீட்டர் தொலைவுக்கு அப்பால் கிடந்தது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்களில் கண்ணாடிகள் நொறுங்கி இருந்தன. வெடி விபத்து சத்தம் பல கிலோமீட்டர் தூரத்துக்கு அப்பால் கேட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
போலீசார் கூறுகையில், வெடி விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. வெடித்தது எத்தகைய பொருள் என்றும் தெரியவில்லை. தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர். முழுமையான விசாரணைக்குப் பிறகு எதையும் கூற முடியும், என்றனர்.
முதல் கட்ட விசாரணையில் கோச்சிங் சென்டர், செப்டிக் டேங்க் ஒன்றின் அடித்தளத்தில் அமைந்திருப்பது தெரியவந்தது. செப்டிக் டேங்கில் உருவான மீத்தேன் வாயு, அழுத்தம் தராமல் வெளியேறி வெடி விபத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.