UPDATED : டிச 05, 2024 12:00 AM
ADDED : டிச 05, 2024 10:06 AM
மேலுார்:
வெள்ளலுாரில் செயல்படும் நுாலக கட்டடம் சிதிலமடைந்துள்ளதால் நுால்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது.
வெள்ளலுாரில் 64 வருடங்களாக செயல்படும் நுாலகத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நுால்கள் உள்ளன. அருகில் உள்ள உறங்கான்பட்டி, குறிச்சிபட்டி பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் நுாலகத்திற்கு தினமும் வந்து செல்கின்றனர்.
அரசுக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வரும் நுாலகம் போதிய பராமரிப்பின்றி, கட்டடம் சிதிலமைடைந்துள்ளதால் நுால்கள் வீணாகி வருகிறது. சமூக ஆர்வலர் கதிரேசன் கூறியதாவது: இப் பகுதி மாணவர்கள் போட்டித் தேர்வுக்கும், மக்கள் நாளிதழ் மற்றும் பொது அறிவுக்காகவும் நுாலகம் வந்து செல்கின்றனர்.
நுாலகத்தில் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வெடிப்பின் வழியாக தண்ணீர் கசிவதால் நுால்கள் நனைந்து வீணாவதோடு கரையான் அரிக்க துவங்கியுள்ளது.
கட்டடம் சிதிலமடைந்துள்ளதால் நுால்களும், அமர்ந்து படிக்க வாசகர்களுக்கும் போதிய இட வசதி இன்றி உள்ளது. புதிய கட்டடம் கட்டி நுாலகத்தை முழு பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்றார்.