UPDATED : ஏப் 26, 2024 12:00 AM
ADDED : ஏப் 26, 2024 10:00 AM
புதுடில்லி:
கடந்த நிதியாண்டில், இந்தியாவின் மருந்து ஏற்றுமதி 10 சதவீதம் அதிகரித்து, 2.32 லட்சம் கோடி ரூபாயாக இருந்ததாக, வர்த்தக அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
நாட்டின் மருந்துகள் மற்றும் மருந்து பொருட்களின் ஏற்றுமதி, முந்தைய ஆண்டைக் காட்டிலும் 9.67 சதவீதம் அதிகரித்து, கடந்த நிதியாண்டில் 2.32 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. வர்த்தக அமைச்சகத்தின் தரவுகளின்படி, கடந்த மார்ச் மாதத்தில் மருந்து ஏற்றுமதி 12.73 சதவீதம் அதிகரித்து, 23,240 கோடி ரூபாயாக இருந்தது.
கடந்த நிதியாண்டில், இந்த துறைக்கான முக்கிய சந்தைகளாக, முதல் ஐந்து இடங்களில் அமெரிக்கா, பிரிட்டன், நெதர்லாந்து, தென்னாப்ரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியாவின் மொத்த மருந்து ஏற்றுமதியில் 31 சதவீதத்திற்கு அதிகமான பங்களிப்புடன் அமெரிக்கா உள்ளது. இதனைத் தொடர்ந்து இங்கிலாந்தும், நெதர்லாந்தும் உள்ளன.
அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிகரித்து வரும் சந்தை வாய்ப்புகள் மற்றும் அதிக தேவை ஆகியவை, இந்தியாவின் ஏற்றுமதியை அதிகரிக்க உதவுகின்றன. வரும் 2030ம் ஆண்டுக்குள், இந்தியாவின் மருந்து வணிகம், 10.89 லட்சம் கோடி ரூபாயை தாண்டும் என, நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்தியா, ஒவ்வொரு மாதமும் சராசரியாக 16,600 கோடி முதல் 24,900 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்து பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது. 60 வகையான சிகிச்சைகளுக்கு தேவையான 60,000த்துக்கும் மேற்பட்ட ஜெனரிக் மருந்துகளை உற்பத்தி செய்து, இந்திய மருந்துத் துறையானது, அளவின் அடிப்படையில் மூன்றாவது பெரிய நாடாகவும், மதிப்பின் அடிப்படையில் 13வது இடத்திலும் உள்ளது.