தோல்வி திறமை குறைவல்ல: தேர்வு முடிவால் வேண்டாம் மன உளைச்சல்
தோல்வி திறமை குறைவல்ல: தேர்வு முடிவால் வேண்டாம் மன உளைச்சல்
UPDATED : மே 09, 2025 12:00 AM
ADDED : மே 09, 2025 08:26 AM
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளிவர உள்ளது. இதேபோல் மே 19 ல் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வர உள்ளன.
தேர்வு முடிவுகள் மதிப்பெண்களை பொறுத்து வெளியிடப்படுகிறது. இதனால் மாணவர்கள் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் கூட இதற்கு விதிவிலக்கு அல்ல. மதிப்பெண்கள் குறைந்தாலும்,வெற்றி பெறும் மதிப்பெண்கள் பெற இயலாத சூழலிலும் மாணவர்கள் மன உளைச்சல் அதிகமாகி தவறான தற்கொலை எண்ணத்திற்கு துாண்டப்படுகின்றனர். இவற்றை தவிர்க்க வேண்டும். நீட் தேர்வு முடிவுகள் வரும் போதும் அதிக அளவில் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். மதிப்பெண்கள் மட்டும் வாழ்க்கையை நிர்ணயிப்பது இல்லை என்ற தெளிவு அவர்களுக்கு ஏற்பட வேண்டும்.
பிளஸ் 2 ,பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளில் தோல்வி அடையும் மாணவர்கள் உடனடி தேர்வு மூலம் வெற்றி அடையலாம்.
மதிப்பெண்களை பொறுத்து வாழ்க்கை அமையப்போவது இல்லை என்ற நடைமுறை வாழ்வியலை கற்றுக்கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையுடன் எதிர்காலத்தை கையாள ஆசிரியர்கள், பெற்றோர்கள் அறிவுறுத்த வேண்டும். தேர்வு முடிவுகள் வெளிவந்தவுடன் பெற்றோர்கள், மாணவர்களுக்கு நேர்மறை எண்ணங்களை உருவாக்க வேண்டும். மன உளைச்சலில் உள்ள மாணவர்களை கண்டறிந்து தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும்.

