அதிக சம்பளம் காட்டும் போலி நிறுவனங்கள்; மாணவர்களுக்கு யு.ஜி.சி., எச்சரிக்கை
அதிக சம்பளம் காட்டும் போலி நிறுவனங்கள்; மாணவர்களுக்கு யு.ஜி.சி., எச்சரிக்கை
UPDATED : ஆக 26, 2025 12:00 AM
ADDED : ஆக 26, 2025 11:03 AM

சென்னை:
குறுகிய கால படிப்பை வழங்குவதாகவும், படித்ததும் அதிக சம்பளத்தில் வேலை கிடைக்கும் என்றும் அறிவிக்கும் கல்வி நிறுவனங்கள் குறித்து, மாணவர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என, பல்கலைக் கழக மானிய குழுவான, யு.ஜி.சி., எச்சரித்துள்ளது.
கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களில், போலி பல்கலைகள் மற்றும் கல்லுாரிகள் இயங்குவதை, ஆய்வின் வாயிலாக யு.ஜி.சி., கண்டறிந்துள்ளது.
இதையடுத்து வெளியிட்டுள்ள அறிக்கை:
உயர்கல்வி நிறுவனங்களின் உண்மை தன்மையை ஆராய்ந்து, யு.ஜி.சி., மற்றும் ஏ.ஐ.சி.டி.இ.,யும் அங்கீகாரம் வழங்குகின்றன.
அதன் அங்கீகாரத்தை பெறாமல், போலி கல்வி நிறுவனங்கள் மாணவர்களை ஏமாற்றுகின்றன. அவை, குறுகிய காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் மற்றும் பட்டய படிப்புகளை வழங்குவதாகவும், குறைவான கட்டணமே வசூலிப்பதாகவும் கவர்ச்சியாக விளம்பரம் செய்கின்றன. அந்த படிப்புகளை முடித்ததும், அதிக சம்பளத்துடன் வேலைக்கு உத்தரவாதம் தருகின்றன.
இவ்வாறான விளம்பரங்களை நம்பாமல், அந்த கல்வி நிறுவனங்களில் படித்த, பழைய மாணவர்களை சந்தித்து, அவற்றின் உண்மை நிலையை அறிய வேண்டும். யு.ஜி.சி., - ஏ.ஐ.சி.டி.இ., இணையதளத்தில் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதா என்பதையும் சரி பார்க்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.