போலி துாதரக சான்று: 46 டாக்டர்கள் மீது போலீசில் புகார்
போலி துாதரக சான்று: 46 டாக்டர்கள் மீது போலீசில் புகார்
UPDATED : டிச 04, 2024 12:00 AM
ADDED : டிச 04, 2024 03:42 PM
சென்னை:
முதுநிலை மருத்துவ படிப்பிற்கு, வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவில், போலி துாதரக சான்று வழங்கிய, 46 டாக்டர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு, 1,800 இடங்கள் உள்ளன. அதில், 50 சதவீத இடங்கள் அரசு டாக்டர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள, 50 சதவீத இடங்கள் பொது கவுன்சிலிங் வழியே நிரப்பப்படுகின்றன. அதன்படி, இந்த ஆண்டு முதுநிலை மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
விண்ணப்பதாரர்களின் ஆவணங்கள் சரிபார்க்கும் பணியின் போது, வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவின் கீழ் விண்ணப்பித்த, 46 பேர் போலி துாதரக சான்றிதழ்கள் வழங்கியது கண்டறியப்பட்டது.
இது குறித்து, மருத்துவ மாணவர் சேர்க்கை குழு அதிகாரிகள் கூறியதாவது:
மருத்துவ மாணவர் சேர்க்கையின் ஒரு பகுதியாக, ஆவணங்களை சரி பார்ப்பது வழக்கம். அவ்வாறு சரி பார்த்த போது, முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஒதுக்கீட்டில் விண்ணப்பித்திருந்த, 46 டாக்டர்களின் துாதரக சான்றிதழ் போலியானது என்பது தெரிய வந்தது.
அந்த விண்ணப்பங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.