UPDATED : செப் 18, 2024 12:00 AM
ADDED : செப் 18, 2024 10:07 PM
தட்சிண கன்னடா:
உறவினருக்கு, தனது கல்லீரலின் ஒரு பகுதியை தானம் கொடுத்த கல்லுாரி பெண் விரிவுரையாளர், திடீரென மரணம் அடைந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரை சேர்ந்தவர் அர்ச்சனா காமத், 33. இவர், மங்களூரு மனேல் சீனிவாச நாயக் எம்.பி.ஏ., கல்லுாரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். இவரது கணவர் சேத்தன் குமார். இவர்களுக்கு, 4 வயதில் மகன் உள்ளார்.
இவரது கணவரின் உறவினர் பெண்ணுக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டது. மாற்று கல்லீரல் தேவைப்பட்டது. கணவர் குடும்பத்தினரின் ரத்த பிரிவு பொருந்தவில்லை. ஆனால், அர்ச்சனாவின் ரத்த பிரிவு பொருந்தியது. இதனால் தன் கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்ய அர்ச்சனா ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து, பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்தது. அர்ச்சனாவின் கல்லீரலின் ஒரு பகுதி அகற்றப்பட்டு, உறவுக்கார பெண்ணுக்கு பொருத்தப்பட்டது. கல்லீரலின் ஒரு பகுதி அகற்றப்பட்டாலும், அது மீண்டும் முழுதாக வளர்ந்து விடும். அதேபோல, தானம் பெறுபவருக்கு பொருத்தப்படும் கல்லீரலும் முழுதாக வளர்ந்து விடும்.
அறுவை சிகிச்சைக்கு பின் அர்ச்சனா, மருத்துவமனையில் சில நாட்கள் ஓய்வெடுத்தார். இதன்பின், மங்களூரு கரங்கல்பாடியில் உள்ள வீட்டுக்கு திரும்பினார். வீடு திரும்பிய சில நாட்களில் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது.
உடனடியாக மங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி, இம்மாதம் 15ல் உயிரிழந்தார். இதற்கான காரணம் குறித்து, மருத்துவர்கள் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையில், கல்லீரல் தானம் பெற்ற பெண், நலமாக உள்ளார்.