UPDATED : மே 21, 2024 12:00 AM
ADDED : மே 21, 2024 05:26 PM

டெக்சாஸ்:
விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல்இந்தியர் என்ற பெருமையை, ஆந்திராவின் கோபிசந்த் தோட்டகுரா, 30, பெற்றுள்ளார்.
அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோசின், ப்ளூ ஆர்ஜின் நிறுவனம், மனிதர்களை விண்வெளிக்கு சுற்றுலா அழைத்து செல்லும்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. இது போன்ற நடவடிக்கையை ஆறு முறை வெற்றிகரமாக மேற்கொண்ட இந்நிறுவனம் சார்பில், நேற்று முன்தினம் ஏழாவது முறையாக ஆறு பேர் கொண்ட குழுவினர் விண்வெளி சுற்றுலா சென்றனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து நியூ ஷெப்பர்ட் என்ற விண்கலன் வாயிலாக, ஆறு பேர் குழுவினர், விண்வெளி சுற்றுலா சென்று வெற்றிகரமாக பூமிக்குதிரும்பினர். இதில், ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபர் கோபிசந்தும் ஒருவர். இதன் வாயிலாக, விண்வெளி சுற்றுலாவுக்கு சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
கடந்த 1984ம் ஆண்டு இந்தியாவின் ராணுவ விங் கமாண்டராக இருந்த ராகேஷ் சர்மா முதல்முறையாக விண்வெளிக்குச் சென்றார். அவருக்கு அடுத்தபடியாக, விண்வெளி பயணம் மேற்கொண்ட இரண்டா-வது இந்தியர் என்ற பெருமையை கோபிசந்த் பெற்றார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஏரோநாட்டிக்கல் பல்கலையில் பட்டம் பெற்றுள்ள கோபிசந்த், தொழிலதிபராக உள்ளார்.
இவர், வணிக ரீதியான ஜெட் விமானங்கள் மட்டுமின்றி, சர்வதேச மருத்துவ சேவைக்கான ஜெட் விமானங்களையும் இயக்கக்கூடியவர். இந்த விண்வெளி சுற்றுலா பயணத்தின்போது கோபிசந்துடன், அமெரிக்காவின் முன்னாள் விமானப்படை கேப்டன் எட் டுவைட், மேசன் ஏஞ்சல், சில்வைன் சிரோன், கென்னத் எல்.ஹெஸ், கரோல் ஷாலர் என மொத்தம் ஆறு பேர் சென்றனர்.