மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு முதல் இடைப்பருவ தேர்வு துவக்கம்
மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு முதல் இடைப்பருவ தேர்வு துவக்கம்
UPDATED : ஆக 07, 2024 12:00 AM
ADDED : ஆக 07, 2024 09:41 AM

பொள்ளாச்சி:
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான முதல் இடைப் பருவத் தேர்வு நேற்று துவங்கிது.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு, காலாண்டு, அரையாண்டு தவிர, பருவத் தேர்வுகளுக்கு மாவட்ட அளவில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டு, தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
அவ்வகையில், மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான முதல் இடை பருவத் தேர்வு, நேற்று துவங்கிய நிலையில், வரும், 9ம் தேதி வரை நடக்கிறது. இதேபோல, 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு நாளை துவங்கி 9ம் தேதி முடிகிறது.
இதற்காக, மாநில அளவில் ஒரே மாதிரியான வினாத்தாள் தயாரிக்கப்பட்டு, நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் சமத்துார் ராம ஐயங்கார் நகராட்சி பள்ளியில் மையம் அமைக்கப்பட்டு, தினமும் பள்ளிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
தினமும், காலை மற்றும் மாலை என, இரு கட்டங்களாக தேர்வு நடத்தப்படும் நிலையில் வினாத்தாள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.
தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
தினமும், காலை, 11:00 முதல் 12:45 மணி வரையும், மதியம், 3:00 முதல் 4:45 மணி வரையும், இரு கட்டங்களாக தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில், தினமும், மையத்திலிருந்து வினாத்தாள் வாங்க வரும் ஆசிரியர்கள் விபரம், கடிதமாக அளிக்கப்படும்.
அவர், இரு தேர்வுக்கான வினாத்தாள்களைப் பெற்று வந்து, தலைமையாசிரியர் வசம் ஒப்படைப்பார். அதனை முறையாக பாதுகாத்து, தேர்வு நேரத்தில் மாணவர்களுக்கு வினியோகிக்கப்படும். தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில், இடைத்தேர்வு முடிந்ததும், கல்வியில் பின்தங்கியோருக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.