தமிழகத்தில் 100 பசுமை பள்ளிகள் வழிகாட்டுதல் வெளியிட்டது வனத்துறை
தமிழகத்தில் 100 பசுமை பள்ளிகள் வழிகாட்டுதல் வெளியிட்டது வனத்துறை
UPDATED : நவ 08, 2024 12:00 AM
ADDED : நவ 08, 2024 11:03 AM

சிவகங்கை:
தமிழகத்தில் 100 அரசு பள்ளிகளில் ரூ.20 கோடி மதிப்பில் பசுமை பள்ளி திட்டத்தை செயல்படுத்த வனத்துறை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
தமிழக அளவில் 2024-2025 ம் கல்வி ஆண்டில் 100 அரசு பள்ளிகளை தேர்வு செய்து, அப்பள்ளிகளை 'பசுமை பள்ளிகள்' திட்டத்தில் சேர்த்து, அதற்கான பணிகளை மேற்கொள்ள அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு, வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி ஒவ்வொரு பள்ளிக்கும் இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.20 லட்சம் வழங்கப்படுகிறது. இக்கல்வி ஆண்டில் 100 பள்ளிகளுக்கு ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பள்ளிக்கும் அரசு ஒதுக்கும் ரூ.20 லட்சத்தில், சோலார் பேனல், பேட்டரி, ஆழ்குழாய் கிணறு, சொட்டு நீர் பாசன கருவி பொருத்த வேண்டும். பசுமை தோட்டம் அமைத்து, 2 ஆண்டு வரை பராமரிக்க வேண்டும். மழை நீர் சேகரிப்பு திட்டம் அமைக்க வேண்டும்.
பள்ளியில் காய்கறி தோட்டம், மருத்துவ குணமுள்ள செடிகள், பழம் தரும் மரக்கன்று வளர்க்க வேண்டும். இந்த தோட்டத்தில் மழை நீரை சேகரித்து பயன்படுத்த வேண்டும். பசுமை திட்டம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். பள்ளியில் 'பசுமை பள்ளி' திட்டத்தில் தேர்வான பள்ளி என போர்டு வைக்க வேண்டும் என்பது போன்ற வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வனத்துறை வலியுறுத்தியுள்ளது.
இத்திட்ட பள்ளிகளை அடிக்கடி கலெக்டர், வனத்துறை, மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்காணித்து வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.