அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிய சிறுவர்கள் நால்வர் சிக்கினர்
அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிய சிறுவர்கள் நால்வர் சிக்கினர்
UPDATED : ஜன 15, 2025 12:00 AM
ADDED : ஜன 15, 2025 10:54 AM

திருநெல்வேலி:
திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கான அரசு சிறுவர் கூர்நோக்கு இல்லம் திருநெல்வேலி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ளது. அங்கு பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 27 சிறுவர்கள் உள்ளனர்.
நேற்று மதியம் 12:00 மணியளவில் உணவிற்காக வரிசையாக அழைத்துச் செல்லப்பட்டனர். உள் கேட் திறந்திருந்ததால் நான்கு சிறுவர்கள் வெளியே தப்பி ஓடினர். நால்வரும் திருட்டு வழக்குகளில் கைதானவர்கள்.
தூத்துக்குடி லூர்தம்மாள்புரம், கயத்தாறு, சங்கரன்கோவிலை சேர்ந்த மூன்று சிறுவர்கள் தனியாகவும் கன்னியாகுமரியை சேர்ந்த ஒரு சிறுவன் தனியாகவும் வெளியேறினர்.
போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி, உடனடியாக வயர்லெஸ் மூலம் மாநகரம் முழுவதும் அலெர்ட் செய்தார். கூர்நோக்கு இல்லம் அருகே உதயாநகரில் சென்று கொண்டிருந்த மூன்று சிறுவர்களை ரோந்து எஸ்.ஐ.,சிவசங்கரன் தலைமையிலான குழுவினர் பிடித்தனர். கன்னியாகுமரி சிறுவனை கூர்நோக்கு இல்லம் அருகிலேயே மைய பாதுகாவலர்கள் பிடித்தனர்.
மேலப்பாளையம் போலீசார் விசாரித்தனர். இந்த மையத்திலிருந்து சிறுவர்கள் அடிக்கடி தப்பி ஓடும் சம்பவங்கள் தொடர்கிறது.