UPDATED : செப் 24, 2025 10:29 AM
ADDED : செப் 24, 2025 10:30 AM
சென்னை:
விளையாட்டு போட்டிகளில் சாதித்த மூன்று வீராங்கனையர், ஒரு விளையாட்டு வீரர் என நான்கு பேருக்கு, அரசு பணிக்கான நியமன ஆணைகளை, முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
சீனாவில் நடந்த, 19வது ஆசிய விளையாட்டு போட்டியில், இரண்டாம் இடம் பிடித்த சதுரங்க விளையாட்டு வீராங்கனை வைஷாலிக்கு, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில், இளநிலை அலுவலர் பணி வழங்கப்பட்டு உள்ளது.
நேபாளத்தில் நடந்த, 13வது தெற்காசிய விளையாட்டு போட்டியில், முதல் இடம் பெற்ற இந்திய அணியின் கால்பந்து வீராங்கனை சுமித்ராவுக்கு, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் கணக்காளர் பணி வழங்கப்பட்டு உள்ளது.
நேபாளத்தில் நடந்த தெற்காசிய விளையாட்டில், கூடைப்பந்து போட்டியில் முதல் இடம் பெற்ற வீராங்கனை சத்யாவுக்கு, தமிழ்நாடு சிமென்ட்ஸ் கழகத்தில், மார்க்கெட்டிங் நிர்வாக பிரிவில் பணி வழங்கப்பட்டு உள்ளது.
சீனாவில் நடந்த, 19வது ஆசிய பாய்மர படகு போட்டி வீரர் சித்ரேஷ் தத்தாவிற்கு, 'சிப்காட்' நிறுவனத்தில் உதவி அலுவலர் பணி வழங்கப்பட்டு உள்ளது. இந்த நான்கு பேருக்குமான பணி நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.