சாஸ்த்ரா பல்கலை தரவரிசையில் நான்கு பெண்கள் முதலிடம்
சாஸ்த்ரா பல்கலை தரவரிசையில் நான்கு பெண்கள் முதலிடம்
UPDATED : ஜூன் 18, 2025 12:00 AM
ADDED : ஜூன் 18, 2025 08:23 AM
 சென்னை: 
தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலை, இன்ஜினியரிங் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலில், முதல் நான்கு இடங்களை பெண்கள் பிடித்துள்ளனர்.
இது குறித்து, பல்கலை வெளியிட்டுள்ள அறிக்கை:
தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலையில், இன்ஜி., சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல், ஜெ.இ.இ., மெயின் தேர்வு மதிப்பெண் மற்றும் பிளஸ் 2 மதிப்பெண்களின் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது. அதில், பல்வேறு தொழில்நுட்ப படிப்புகளுக்கான தரவரிசையில், நான்கு பெண்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் சைதன்யா ஜூனியர் கல்லுாரியை சேர்ந்த அகேலா மேகவன் சர்மா, 99.39 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்தார். தெலுங்கானாவின் பேகம்பேட்டை, சைதன்யா ஜூனியர் கல்லுாரி மாணவி புர்ரா நிஷதா, 98.30 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடம் பிடித்தார்.
தெலுங்கானாவின் கம்மம் எஸ்.ஆர்., ஜூனியர் கல்லுாரி மாணவி இந்துாரி ரஷ்மிதா, சென்னை கே.கே.நகர் பி.எஸ்.பி.பி., பள்ளி மாணவி அக் ஷயா சிவகுரு ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர்.
சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், தகுதி அடிப்படையில், 14ம் தேதி வரை பெறப்பட்டன. மொத்தம் 20,000 விண்ணப்பங்கள் வந்த நிலையில், தரவரிசை பட்டியல், 'www.sastra.edu' என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு, அதன் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடக்கிறது.
வடகிழக்கு மாநில மாணவ - மாணவியருக்கு, 100 சதவீதம் கல்வி உதவித்தொகை, இலவச உறைவிடம், உணவு வழங்கப்படுகின்றன. வகுப்புகள், ஆக., 1 முதல் துவங்கவுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

