எல்.கே.ஜி., முதல் பி.ஜி., வரை இலவச கல்வி, நிதியுதவி: டில்லியில் பா.ஜ., தாராள வாக்குறுதி
எல்.கே.ஜி., முதல் பி.ஜி., வரை இலவச கல்வி, நிதியுதவி: டில்லியில் பா.ஜ., தாராள வாக்குறுதி
UPDATED : ஜன 22, 2025 12:00 AM
ADDED : ஜன 22, 2025 10:53 AM

புதுடில்லி:
டில்லி சட்டசபை தேர்தலுக்காக பா.ஜ., நேற்று வெளியிட்ட இரண்டாவது தேர்தல் அறிக்கையில் மாணவர்களுக்கு ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளது. ஏழை மாணவர்களுக்கு ஆரம்பக் கல்வி முதல் முதுநிலைப் படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
டில்லி சட்டசபைக்கு, பிப்., 5ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது; பிப்., 8ல் முடிவுகள் அறிவிக்கப்படும். ஆட்சியை தக்க வைக்க ஆம் ஆத்மியும், 27 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பா.ஜ.,வும், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த இரு கட்சிகளை தவிர காங்கிரஸ், இடதுசாரிகள், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளும் தனித்து போட்டியிடுகின்றன.
பா.ஜ., தேர்தல் அறிக்கையின் முதல் பகுதியை மத்திய அமைச்சரும், பா.ஜ., தேசியத் தலைவருமான நட்டா கடந்த 17ம் தேதி வெளியிட்டார். அதில் டில்லியில் ஏற்கனவே அமலில் உள்ள நலத்திட்டங்கள் தொடரும் என கூறப்பட்டிருந்தது.
அத்துடன், முதியோருக்கு மாதம் 2,500 ரூபாய் ஓய்வூதியம், அவர்களில் 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாதம் 3,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அனுராக் தாக்குர் தேர்தல் அறிக்கையின் இரண்டாம் பகுதியை வெளியிட்டார்.
அதில் கூறியிருப்பதாவது:
*யு.பி.எஸ்.சி., மற்றும் மாநில அரசு பணியாளர் வாரிய போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு முதல் இரண்டு முயற்சிகள் வரை 15,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்
*ஏழை மாணவர்களுக்கு கே.ஜி., எனப்படும், ஆரம்பக் கல்வி முதல் பி.ஜி., எனப்படும் முதுநிலை படிப்பு வரை இலவச கல்வி திட்டம் செயல்படுத்தப்படும்
*ஐ.டி.ஐ., மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகளில் சேரும் பட்டியல் இனத்தவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்
*ஆட்டோ மற்றும் டாக்சி டிரைவர்களுக்கு நலவாரியம் ஏற்படுத்தப்படும். அவர்களுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு ஆயுள் காப்பீடு, 5 லட்சம் ரூபாய்க்கு விபத்து காப்பீடு வழங்கப்படும்
*ஆம் ஆத்மி அரசில் நடந்த முறைகேடுகள், ஊழல்களை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.