கல்லுாரி மாணவ, மாணவியருக்கு இலவச ஹெச்.ஐ.வி., பரிசோதனை
கல்லுாரி மாணவ, மாணவியருக்கு இலவச ஹெச்.ஐ.வி., பரிசோதனை
UPDATED : ஜூலை 28, 2026 06:33 PM
ADDED : ஜூலை 28, 2026 06:34 PM
பெங்களூரு:
இளைஞர்களிடம் ஹெச்.ஐ.வி., பரவுவதை தடுக்க, மாநிலத்தில் உள்ள அனைத்து கல்லுாரி மாணவ மாணவியருக்கும் ஹெச்.ஐ.வி., பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை முடிவு செய்து உள்ளது.
இந்தியாவில் ஹெச்.ஐ.வி., பாதிக்கப்பட்டோர் அதிகமுள்ள மூன்றாவது மாநிலமாக கர்நாடகா உள்ளது. மாநிலத்தில் 2.60 லட்சம் பேர் ஹெச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 2.05 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டோர் 7,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இளைஞர்கள் மத்தியில் ஹெச்.ஐ.வி., வேகமாக பரவி வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
இதனால், மாநிலத்தில் உள்ள அரசு, தனியார் என அனைத்து கல்லுாரி மாணவ, மாணவியருக்கும் ஹெச்.ஐ.வி., பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதில், கல்வித்துறையும் இணைந்து செயல்பட உள்ளது.
இது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கல்லுாரி மாணவர்கள் மத்தியில் தொற்று பரவுவதை தடுக்க பரிசோதனை செய்யப்பட உள்ளது. அனைத்து கல்லுாரிகளின் முதல்வர்களும் ஒத்துழைக்க வேண்டும். லட்சக்கணக்கான மாணவ - மாணவியருக்கு சோதனை செய்யப்பட உள்ளது. இதில், ரத்தப் பரிசோதனை செய்யப்படாது.
மாறாக,மாணவர்கள், தங்கள் மொபைல் போன் வழியாகவே சோதனை செய்து கொள்ளலாம். கியு.ஆர்., குறியீடுகள் கல்லுாரி வளாகங்களில் ஒட்டப்படும். கியு.ஆர்., குறியீட்டை ஸ்கேன் செய்தால் ஹெச்.ஐ.வி., இருக்கிறதா என்பதை கண்டறியும் அளவில் சில எளிய கேள்விகள் கேட்கப்படும்.
இந்த கேள்விகளுக்கு மாணவர்கள் பதிலளிக்க வேண்டும். இந்த கேள்விகளின் பதில்கள் அடிப்படையில்ஹெச்.ஐ.வி., பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற நபர்கள் அடையாளம் காணப்படுவர். அவர்கள் தங்கள் அருகில் உள்ள இலவச அரசுஹெச்.ஐ.வி பரிசோதனை மையங்களில் பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்படுவர்.
சோதனையின் முடிவுகள் பாதுகாப்பாக இருக்கும். பொது வெளியில் வெளியிடப்படாது. ஹெச்.ஐ.வி., தொற்று இருப்பவர்களுக்குஆரம்ப கட்டத்திலே சிகிச்சை அளிக்கப்படும். மேலும், செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை குறித்து எடுத்துரைக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
