UPDATED : ஜூன் 18, 2024 12:00 AM
ADDED : ஜூன் 18, 2024 08:32 AM

சென்னை :
தமிழகத்தில், இலவசமாக, சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தின் வாயிலாக, ஆண்டுக்கு 43 லட்சம் பள்ளி மாணவியர் பயனடைந்து வருகின்றனர்.
கடந்த, 2011ல் இத்திட்டத்தை தமிழக அரசு துவங்கியது. இதன் வாயிலாக, பள்ளிகளில் பருவமடைந்த மாணவியர், பிரசவித்த பெண்கள் உள்ளிட்டோருக்கு, இலவசமாக சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படுகின்றன. இதற்காக, ஆண்டுக்கு, 115 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.
இத்திட்டத்தில், 10 முதல் 19 வயது வரையிலான மாணவியர், 43 லட்சம் பேர் ஆண்டுதோறும் பயனடைந்து வருகின்றனர். ஒரு மாணவிக்கு ஆண்டுக்கு, 18 பாக்கெட்டுகள் சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படுகின்றன. ஒரு பாக்கெட்டில், ஆறு நாப்கின்கள் இருக்கும். பயன்படுத்திய நாப்கின்களை அப்புறப்படுத்துவதற்கான இயந்திரமும் பள்ளி வளாகங்களில் வைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் கூறியதாவது:
வளர் இளம் பருவத்தில் உள்ள மாணவியர் சுகாதாரத்தை பேணும் வகையில், விலையில்லா நாப்கின் வழங்கும் திட்டத்தை, அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் வாயிலாக கொள்முதல் செய்யப்பட்டு, பள்ளி மாணவியர், பிரசவித்த பெண்கள் உள்ளிட்டோருக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில், 7.74 கோடி பேர் பயன் பெற்றுள்ளனர். மாநிலம் முழுதும் இத்திட்டத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.