UPDATED : மே 30, 2024 12:00 AM
ADDED : மே 30, 2024 10:42 AM

சென்னை:
அரசு பள்ளிகளில், ஸ்பீட் ஸ்கேட்டிங் பயிற்சி அளிக்கும் வகையில், 80 பயிற்சியாளர்களை களமிறக்க, தமிழக ஸ்பீட் ஸ்கேட்டிங் சங்கம் முடிவு செய்துஉள்ளது.
தமிழக ஸ்பீட் ஸ்கேட்டிங் சங்கம் சார்பில், ஏலகிரியில் பயிற்சியாளர்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. அதில், நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில், 80 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு கடந்த 25, 26ம் தேதிகளில், தமிழக ஸ்கேட்டிங் சங்க வீரர்கள் முதல்நிலை பயிற்சி அளித்தனர். அவர்களை அரசு பள்ளிகளில் பயிற்சியாளர்களாக நியமிக்க சங்கம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, அதன் செயலர் முருகானந்தம் கூறியதாவது:
தமிழகத்தில் ஸ்பீட் ஸ்கேட்டிங் விளையாட்டை, மாணவர்களிடம் பிரபலமாக்கும் வகையில், அரசு பள்ளிகளில் உள்ள திறமையான மாணவர்களை தேர்வு செய்து, இலவசமாக பயிற்சி அளிக்க உள்ளோம்.
இதுகுறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர், உடற்கல்வி இயக்குனரிடம் பேசி உள்ளோம். ஜூன் முதல் வாரத்திற்குள் அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
பின், திறமையான மாணவர்களுக்கு ஸ்கேட்டிங் போர்ட், பாதுகாப்பு உபகரணங்களை இலவசமாக வழங்கி பயிற்சி அளிக்க உள்ளோம். இதற்காக முதல் கட்டமாக, 80 பயிற்சியாளர்களை தேர்வு செய்துள்ளோம். அவர்களுக்கு முதல்கட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து டிசம்பரில், கொடைக்கானலில் மேம்பட்ட பயிற்சி வழங்கப்படும். அடுத்தாண்டு, வட மாநிலங்களில் சர்வதேச பயிற்சி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.