UPDATED : ஜன 23, 2025 12:00 AM
ADDED : ஜன 23, 2025 12:38 PM

பெங்களூரு:
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல் கட்டமாக, ஆளில்லாத செயற்கைக்கோளை அனுப்புவதற்கு தேவையான, வீரர்கள் தங்கும் கலன்கள் தயாரானதை அடுத்து, பெங்களூரில் இருந்து ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இஸ்ரோ அனுப்பி வைத்துள்ளது.
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில், இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் ஈடுபட்டு உள்ளது. முந்தைய சோவியத் யூனியன், அமெரிக்கா மற்றும் சீனா மட்டுமே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியுள்ளன.
ககன்யான் திட்டத்தின் கீழ் பூமியில் இருந்து, 400 கி.மீ., உயரத்தில் சுற்று வட்ட பாதைக்கு மனிதர்களை அனுப்பி, மீண்டும் பூமிக்கு திரும்புவது நோக்கமாகும். இதற்கான ஆய்வுகள் மற்றும் பணிகள் நீண்ட காலமாக நடந்து வருகின்றன. அடுத்தாண்டில், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
அதற்கு முன்பாக, மனிதர்கள் இல்லாமல் செயற்கைக்கோளை அனுப்பி சோதித்து பார்க்க, இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் திரவ உந்துவிசை முறை மையத்தில், வீரர்கள் தங்கும் கலன் தயாரிக்கப்பட்டு வருகிறது.
தற்போது அந்த கலனுக்கான திரவ உந்துவிசை முறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு தயாராக உள்ளன. இதையடுத்து அது, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்துக்கு அந்த கலன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அங்கு மற்ற இயந்திரங்கள், சாதனங்களுடன் பொருத்தப்பட்டு, செயற்கைக்கோளில் கலன் இணைக்கப்படும். அதன் பின், ஆளில்லா முதல் ககன்யான் பயணம் துவங்கும்.