பொது மாறுதல் கலந்தாய்வு; இடையூறு இன்றி நடத்த கோரிக்கை
பொது மாறுதல் கலந்தாய்வு; இடையூறு இன்றி நடத்த கோரிக்கை
UPDATED : மே 16, 2024 12:00 AM
ADDED : மே 16, 2024 10:37 AM
தேனி:
திட்டமிட்டுள்ளபடி ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வினை இடையூறு இன்றி நடத்திட வேண்டும்' என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷுக்கு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
கூட்டமைப்பு பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் துறையின் அமைச்சருக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
தொடக்க கல்வித்துறையில் மாநில முன்னுரிமை அமல்படுத்தப்பட்டு, பதவி உயர்வு சீரமைக்கப்பட்டுள்ளது. இதனால் முதல்முறையாக தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் முன்னுரிமை பாதிப்பின்றி மாறுதலில் செல்லும் வகையில் கலந்தாய்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் கல்வித்துறையில் மாற்றங்களை பொறுத்துக் கொள்ளாத சிலர் திட்டமிட்டு பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வு அவசியம் என்று அரசு முடிவு செய்துள்ளதாக வதந்தி பரப்புகின்றனர்.
அரசு வெளியிட்டுள்ள அரசாணையை வரவேற்று மாறுதலுக்காக இரு நாட்களில் தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் இடைநிலை ஆசிரியர்கள் 3 ஆயிரம் பேர், பட்டதாரி ஆசிரியர்கள் 1790 பேர், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 891 பேர், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 155 பேர் என மொத்தம் 5869 பேர் விண்ணப்பித்துள்ளனர். அரசு வெளியிட்டுள்ள கலந்தாய்வு அட்டவணையில் பாதிப்பு இன்றி மாறுதல் கலந்தாய்வினை நடத்திட வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.