கற்றலில் பின்தங்கும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் வீட்டுப்பாடம் கொடுத்தால் மாற்றம் ஏற்படும்
கற்றலில் பின்தங்கும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் வீட்டுப்பாடம் கொடுத்தால் மாற்றம் ஏற்படும்
UPDATED : ஆக 03, 2024 12:00 AM
ADDED : ஆக 03, 2024 10:22 AM

பொள்ளாச்சி :
அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், 3 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு, வீட்டுப்பாடம் கொடுத்து, முறையாக கற்றல் திறனை மேம்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பொள்ளாச்சி வடக்கு மற்றும் தெற்கு, வால்பாறை, ஆனைமலை, சுல்தான்பேட்டை, மதுக்கரை, கிணத்துக்கடவு என, ஏழு ஒன்றியங்கள் உள்ளன. இங்கு, 425 தொடக்கப் பள்ளிகள், 105 நடுநிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன.
இப்பள்ளி மாணவர்கள், ஆண்டு இறுதித் தேர்வை எதிர்கொண்டு, தோல்வியடைந்தாலும் அடுத்த வகுப்பிற்கு 'பாஸ்' ஆகி விடுகின்றனர். உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் போது, கற்றல் திறனில் மிகவும் பின்தங்கியிருப்பது கண்டறியப்படுகிறது.
நடப்பு கல்வியாண்டு, ஒவ்வொரு அரசு மேல்நிலைப் பள்ளியிலும் சேர்ந்த மாணவர்களில், 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரையிலான மாணவர்கள், அடிப்படை கல்வி அறிவைப் பெறாமல் உள்ளனர். இவர்களுக்கு, எழுதவும், வாசிக்கவும் தெரியாததால் ஆசிரியர்கள் செய்வதறியாது திணறி வருகின்றனர்.
அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
தொடக்கப் பள்ளிகளில், 1 மற்றும் 2ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது என, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் மற்ற மாணவர்களுக்கும் வீட்டுப்பாடம் கொடுப்பதில்லை.
பள்ளிக்கு ஒரு நாள் வருகை புரிந்து, அந்த மாணவன் ஆண்டு இறுதி தேர்வை எதிர்கொண்டாலும் அடுத்த வகுப்புக்கு பாஸ் செய்து விட வேண்டும் என, உத்தரவு உள்ளதால், கற்றல் திறனை மேம்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.
குறிப்பாக, பெற்றோர்களின் ஒத்துழைப்பு இல்லாததால், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்க தயக்கம் காட்டுகின்றனர். வீட்டுப் பாடங்களை முடிக்க மாணவர்களை ஊக்குவிப்பதன் வாயிலாக கற்றலை வலுப்படுத்துதல், சிந்தனை திறனை வளர்க்க முடியும்.
இவ்வாறு கூறினர்.