உலகளவில் தலைசிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியல் வெளியீடு: இடம்பிடித்த இந்திய பல்கலைகள்
உலகளவில் தலைசிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியல் வெளியீடு: இடம்பிடித்த இந்திய பல்கலைகள்
UPDATED : பிப் 21, 2025 12:00 AM
ADDED : பிப் 21, 2025 12:53 PM
புதுடில்லி:
நடப்பு 2025ம் ஆண்டுக்கான உலகளவில் தலைசிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
உலகம் முழுதும், 80க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்கள், அதன் கல்வி தரம், மாணவர் - ஆசிரியர் விகிதம், ஆசிரியர்கள் பெற்ற விருதுகள், சாதனைகள், மாணவர்கள் விகிதம் உள்ளிட்ட பல காரணிகளின் அடிப்படையில் தரம் பிரிக்கப்படுகிறது.
அந்த வகையில் 2025ம் ஆண்டுக்கான உலகளவில் தலைசிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், கடந்த 14 ஆண்டுகளாக முதல் இடத்தில் ஹார்வார்டு பல்கலை., உள்ளது. 2வது இடத்தில் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் 2வது இடத்தில் உள்ளன.
ஸ்டான்போர்டு பல்கலை மற்றும் கேம்ப்ரிட்ஜ் பல்கலை 4ம் இடத்தில் உள்ளன. பிரின்ஸ்டன் பல்கலை 6வது இடத்திலும், சீனாவின் சிங்குவா பல்கலை 8வது இடத்திலும், யேல் பல்கலை 9வது இடத்திலும், ஜப்பானின் டோக்கியோ பல்கலை 10வது இடத்தில் உள்ளன.
இந்திய அளவில் இந்திய அறிவியல் கழகம் சிறந்த கல்வி நிறுவனமாக உள்ளது. ஐ.ஐ.டி., டில்லி 2வது இடத்திலும், ஐ.ஐ.டி., சென்னை 3வது இடத்திலும் உள்ளன. ஒடிசாவில் உள்ள சிக்ஷா ஓ அனுசந்தன் பல்கலை 4வது இடத்தில் உள்ளது.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தாலும், சிலி, மலேசியா, போலாந்து, போர்ச்சுகல், ஆகிய நாடுகள் முதல்முறையாக இந்தப் பட்டியலில் இணைந்துள்ளன.

