சீருடைகளை சீரமைக்க அரசு நடவடிக்கை தேவை: பெற்றோர் எதிர்பார்ப்பு
சீருடைகளை சீரமைக்க அரசு நடவடிக்கை தேவை: பெற்றோர் எதிர்பார்ப்பு
UPDATED : ஜூன் 13, 2024 12:00 AM
ADDED : ஜூன் 13, 2024 10:34 AM

உடுமலை:
புதிய கல்வியாண்டில், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடைகள் சரியான அளவில் சீரமைப்பதற்கு, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, இடைநிற்றல் இல்லாமல் கல்வியை தொடர்வதற்கு, அரசின் சார்பில் நலத்திட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன. துவக்கம் முதல் உயர்நிலை வகுப்பு மாணவர்களுக்கு, ஒரு கல்வியாண்டுக்கு, நான்கு செட் சீருடைகளும் வழங்கப்படுகின்றன.
முந்தைய கல்வியாண்டில், சீருடைகளுக்கான அளவுகள் பள்ளிகளில் கேட்கப்பட்டு, ஒவ்வொரு பருவமாக மாணவர்களுக்கு அவை வினியோகிக்கப்பட்டன. இதனால் ஒவ்வொரு கல்வியாண்டிலும், 90 சதவீத மாணவர்களுக்கு நுாறு சதவீதம் சரியான அளவில் சீருடைகள் இருப்பதில்லை.
பருமனாக இருக்கும் மாணவர்களுக்கு அளவு குறைவாக இருப்பது, ஒல்லியாக இருப்பவர்களுக்கு அதிகமான அளவில் இருப்பது என வழங்கப்பட்டது. இதனால் பலரும் மீண்டும் சீருடைகளை சீரமைத்துதான் பயன்படுத்த வேண்டியுள்ளது.
சீருடைகளை முழுமையாக பிரித்து, பின் மீண்டும் புதிய தையல் போடும் அளவுக்கு சீரமைக்க வேண்டி வருகிறது. சீருடைகளை சரியான அளவில் மாற்றுவதற்கும், பெற்றோர் அதிகம் செலவிட வேண்டி வருகிறது.
சில மாணவர்களுக்கு அளவு குறைவாக இருப்பதால், இரண்டு சீருடைகளை ஒன்றிணைத்து தைத்து போட வேண்டி வருகிறது. மீண்டும் சீருடைகளை தைக்கும் பணிகளால், பெற்றோர் இத்திட்டத்தில் அதிருப்தியில் உள்ளனர்.
அரசின் சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட பொருள், மாணவர்களுக்கு முழுமையாக பயனுள்ளதாக இருக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர்.
பெற்றோர் கூறியதாவது:
மாணவர்களுக்கு சீருடை வழங்கும் திட்டம் வரவேற்க கூடியதுதான். ஆனால் அந்த சீருடைகள் பயனுள்ள வகையில் இருக்க வேண்டும். பள்ளிகளில் வழங்கப்படும் சீருடைகளை மீண்டும் புதுப்பிக்கவும் அதிகம் செலவாகிறது.
பள்ளிகளில் வழங்கப்படும் போதே மாணவர்களின் அளவுகளை சரிபார்த்து, அவர்கள் அணியும் வகையில் சீரமைக்கும் பொறுப்பையும் கல்வித்துறை ஏற்க வேண்டும். அரசு இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.