ஆங்கிலத்தில் சரளமாக கதை சொல்லும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள்
ஆங்கிலத்தில் சரளமாக கதை சொல்லும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள்
UPDATED : ஆக 20, 2025 12:00 AM
ADDED : ஆக 20, 2025 08:41 AM
கோவை:
நடப்பு கல்வியாண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும், வாசிப்பு இயக்க புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. இதன் உதவியால், மாணவர்களின் ஆங்கில மொழித்திறன் அதிகரித்துள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
மாணவர்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்து, கதை சொல்லுதல் மற்றும் எழுதுதல் போன்ற கற்பனைத் திறன்களை மேம்படுத்த, 16 பக்கங்கள் கொண்ட சிறிய அளவிலான கதைப்புத்தகங்கள் தமிழ், ஆங்கில மொழிகளில் வழங்கப்பட்டுள்ளன.
டி.ஏ.ராமலிங்கம் செட்டியார் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடைபெறும் பிரார்த்தனை கூட்டத்தில், மாணவர்கள் வாசிப்பு இயக்க புத்தகத்தின் கதைகளை சொல்லி வருகின்றனர். குறிப்பாக, ஆங்கில மொழிக் கதைகளை சொல்வதில் மாணவர்கள் ஆர்வம் காட்டுவதாக, இப்பள்ளி ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
அவர்கள் கூறுகையில், வாசிப்பு இயக்க புத்தகத்தில் தமிழ் கதைகள் மட்டுமல்லாமல், ஆங்கிலக் கதைகளும் இடம்பெற்றுள்ளது, மாணவர்களின் மொழித்திறன் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறது. மாணவர்களின் கதை சொல்லும் திறன், குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டுள்ளது. தமிழ் மட்டுமல்லாமல், ஆங்கில மொழியிலும் மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் கதை சொல்ல தொடங்கியுள்ளனர் என்றனர்.