தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு மருத்துவர்களை நேரடி நேர்காணல் மூலம் தேர்வு செய்யக்கூடாது: சீமான்

அரசு மருத்துவர்களை நேரடி நேர்காணல் மூலம் தேர்வு செய்யக்கூடாது: சீமான்

அரசு மருத்துவர்களை நேரடி நேர்காணல் மூலம் தேர்வு செய்யக்கூடாது: சீமான்


UPDATED : பிப் 24, 2025 12:00 AM

ADDED : பிப் 24, 2025 08:52 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 24, 2025 12:00 AM ADDED : பிப் 24, 2025 08:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
அரசு மருத்துவர்களை நேரடி நேர்காணல் மூலம் தேர்வு செய்யக்கூடாது என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:


தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள 658 மருத்துவர் பணியிடங்களில் போட்டித்தேர்வின்றி நேரடியாக மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கடந்த 31.01.2025 அன்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

தமிழக அரசின் சுகாதாரத்துறையில் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட 200 வகைப்பட்ட மருத்துவப் பணியாளர்கள் நியமனத்தில் நடைபெற்று வந்த ஊழல் மற்றும் முறைகேடுகளைக் களையும் பொருட்டு, 2012ம் ஆண்டு மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தை ( MRB - Medical Services Recruitment Board) தொடங்கியது. 2012ம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டுவரை 6 ஆண்டுகளில் 4 முறை தேர்வுகள் நடத்தி 13 ஆயிரம் மருத்துவர்கள் எவ்வித குளறுபடிகளின்றி மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தால் நியமனம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் தி.மு.க., அரசு பொறுப்பேற்ற கடந்த 4 ஆண்டுகளில் வெறும் 1061 மருத்துவர்கள் மட்டுமே நியமனம் செய்யப்பட்டனர். அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப்பணியிடங்களை தி.மு.க., அரசு நிரப்பாதது ஏன்? என்று பலமுறை நான் கண்டனம் தெரிவித்த பிறகு, கடந்த சனவரி மாதம் தனியார் நிறுவனம் மூலம் மருத்துவர்கள் நியமனத்திற்கான தேர்வுகள் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவித்தார். அதோடு, பெரிய அளவில் மருத்துவர்கள் தேர்வினை தனியார் நிறுவனத்தின் மூலம் நடத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

அதையும் நான் வன்மையாக கண்டித்ததோடு, கடந்த காலங்களில் பல்லாயிரக்கணக்கான மருத்துவர் மற்றும் மருத்துவப் பணியாளர் பணியிடங்களை நிரப்பிய தமிழக அரசின் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தால் வெறும் 2553 மருத்துவர்கள் நியமனத்திற்கான தேர்வினை நடத்த முடியாதா? தி.மு.,க., அரசின் நிர்வாகத்திறமை இன்மையை அமைச்சரே ஒப்புக்கொள்கிறாரா? என்ற கேள்விகளையும் எழுப்பினேன்.

இதையடுத்து பின்வாங்கிய அமைச்சர், தற்போது 2553 மருத்துவர் பணியிடங்களுக்கு பதிலாக, வெறும் 658 சிறப்பு மருத்துவர்கள் மட்டும் தகுதித்தேர்வே இல்லாது,நேர்காணல் மூலம் நேரடியாக நியமிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பால் இரவுப் பகல் பாராது படித்து தகுதித் தேர்வெழுத ஆயத்தமான மருத்துவர்கள் பெரும் ஏமாற்றமும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.

மருத்துவப்பணியாளர்கள் நியமனத்தில் நடைபெற்ற ஊழல் முறைகேடுகள் காரணமாகவே, நேர்காணல் முறை கைவிடப்பட்டு, அரசு மருத்துவப்பணியாளர் தேர்வாணையம் இந்தியாவிலேயே முதல்முறையாக மாஜி முதல்வர் ஜெயலலிதாவால் தோற்றுவிக்கப்பட்டது.

ஆனால், அதனை கைவிட்டு, தற்போது மீண்டும் தகுதி தேர்வின்றி நேர்காணல் மூலம் நேரடியாக மருத்துவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்ற அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவித்து உள்ளதன் பின்னணியில் ஒவ்வொரு மருத்துவர் நியமனத்திற்கும் லட்சக்கணக்கில் லஞ்சம் பெறப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதன் மூலம் நேரடி மருத்துவர்கள் பணி நியமனத்தில் மிகப்பெரிய முறைகேடுகள் நடைபெறுகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.

முந்தைய அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காலம் என்பதால் அவசரத்தேவைக்காக அரசு மருத்துவர்கள் நேர்காணல் மூலம் நேரடியாக நியமனம் செய்யப்பட்டனர். தற்போது அப்படியான பெருந்தொற்று சூழல் இல்லாதபோது நேரடி நியமனம் செய்வது ஏன்? ஏற்கனவே, மருத்துவத் தேர்வாணையத்தின் மூலம் முறையாக தேர்வு எழுதி தேர்ந்தெடுக்கப்பட்ட 2553 மருத்துவர்களுக்கே இதுவரை பணியாணை வழங்காது தி.மு.க., அரசு தாமதப்படுத்தும் நிலையில், திடீரென நேரடியாக மருத்துவர்களை நியமனம் செய்யும் அளவிற்கு அப்படி என்ன அவசர தேவை எழுந்துள்ளது?

ஆகவே, தகுதித்தேர்வின்றி நேர்காணல் மூலம் நேரடியாக அரசு மருத்துவர்களை பணி நியமனம் செய்வது பெரும் ஊழல் முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என்பதால் அம்முடிவைக் கைவிட்டு, வழக்கம்போல அரசு மருத்துவப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலமே மருத்துவர் தகுதித்தேர்வினை நடத்தி காலியாகவுள்ள அரசு மருத்துவர் பணியிடங்கள் அனைத்தையும் விரைந்து நிரப்ப வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us